(எம்.மனோசித்ரா)

இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகளை ஒக்டோபரிலும் மற்றும் சாதாரண பரீட்சைகளை 2023 ஆரம்ப பகுதியிலும் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதோடு ,  பாடசாலைகளில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தவணை விடுமுறைகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கு அமைய வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Articles Tagged Under: உயர்தரப் பரீட்சை | Virakesari.lk

அதற்கமைய  தேசிய பரீட்சைகள் மற்றும் தவணை விடுமுறைகள் தொடர்பில் கல்வி அமைச்சினால் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்

முதலாம் தவணை

இவ்வாண்டுக்கான முதலாம் தவணையில் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை (இந்த நாட்கள் உட்பட) முன்னெடுக்கப்படும். அதற்கமைய மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் காரணமாக விடுமுறை வழங்கப்படும்.

இதே வேளை முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட  தவணை செயற்பாடுகள் ஜூன் மாதம் 6 ஆம் திகதி முதல் ஜூலை 8 ஆம் திகதி வரை (இந்த இரு தினங்கள் உள்ளடங்களாக) இடம்பெறும். அத்தோடு  ஜூலை 9 ஆம் திகதி முதல் ஜூலை 17 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.

இரண்டாம் தவணை

இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஜூலை 18 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை (இந்த இரு தினங்களும் உட்பட) இடம்பெறும்.

மூன்றாம் தவணை

இவ்வாண்டுக்கான மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை (இந்த இரு தினங்கள் உள்ளடங்கலாக) இடம்பெறும். அதற்கமைய ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் காரணமாக விடுமுறை வழங்கப்படும்.

அத்தோடு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் நவம்பர் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை இடம்பெறும்.

முஸ்லிம் பாடசாலைகள்

முதலாம் தவணை

நாடளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும். மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள்  காரணமாக விடுமுறை வழங்கப்படும்.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள்  ஜூன் 6 ஆம் திகதி முதல் ஜூலை 8 ஆம் திகதி வரை இடம்பெறும். (இந்த இரு தினங்கள் உட்பட)

இரண்டாம் தவணை

முஸ்லிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஜூலை 18 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை (இந்த இரு தினங்களும் உட்பட) இடம்பெறும்.

மூன்றாம் தவணை

முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி வரை ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை (இந்த இரு தினங்களும் உட்பட) இடம்பெறும். அதற்கமைய ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.

மூன்றாம் தவணையின் இரண்டாம்கட்ட கல்வி செயற்பாடுகள் ஒக்டோபர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அந்தந்த மாகாண கல்வி அமைச்சுக்களில் தமது மாகாணங்களில் விசேட நிலைமைக்கு அமைய பாடசாலை தவணைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென எண்ணும் பட்சத்தில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதி கல்வி மற்றும் உயர்கல்வி செயலாளரின் 97/15 சுற்றுநிரூபத்திற்கு அமைய மாற்ற முடியும்.

பாடசாலை தவணைகள் குறித்த மேற்குறிப்பிடப்பட்ட சுற்று நிரூபத்திற்கமைய நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் 210 நாட்கள் கல்வி செயற்பாடுகள் இடம்பெற வேண்டும். அதற்கமைய இவ்வாண்டில் அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சகல தனியார் பாடசாலைகளில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் அதிகரிக்கப்பட்டு 139 நாட்கள் கல்வி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகளை ஒக்டோபரிலும் மற்றும் சாதாரண பரீட்சைகளை 2023 ஆரம்ப பகுதியிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு , பாடசாலைகளில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தவணை விடுமுறைகள் மேற்கூறப்பட்ட முறையில் வழங்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை ஒக்டோபரில் நடத்தும் தீர்மானம் கலந்துரையாடல் மட்டத்திலேயே  உள்ளதாகவும் , அது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார்.