(நா.தனுஜா)

வொஷிங்கடனில் இலங்கைத்தூதரகத்திற்கென புதிய கட்டடமொன்றை வாங்கும் விவகாரத்தில்  332,02 அமெரிக்க டொலர் மோசடியில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய சிற்ரன் விக்ரமசூரிய அக்குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

வொஷிங்டனின் குடிவரவு மற்றும் சுங்க நடவடிக்கைகளுக்கான உள்நாட்டுப் பாதுகாப்பு விசாரணைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே, தான் குற்றமிழைத்ததாக ஜாலிய விக்ரமசூரிய ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

ஜாலிய விக்ரமசூரிய கடந்த 2008 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவிற்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றினார். 

அக்காலப்பகுதியில் தான் மோசடியில் ஈடுபட்டதாக கொலம்பியாவிற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் ஜாலிய விக்ரமசூரிய ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு உயர்ந்தபட்சம் 5 வருட சிறைத்தண்டனையும் குறித்த தொகை அபராதமும் விதிக்கப்படக்கூடும் என்று கருதப்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் கடந்த 2013 ஆம் ஆண்டில் வொஷிங்டனில் தூதரகத்திற்கென புதிதாகக் கட்டடமொன்றை வாங்குவதற்குத் திட்டமிட்டபோது, அந்தக் கட்டடத்திற்கான விலையை 332,027 அமெரிக்க டொலர்களென உண்மை விலையைவிட அதிகரித்துக் காண்பிக்கும் வகையிலான ஆவணமொன்றைத் தயாரித்ததுடன், அந்த நிதியை கட்டட நிர்மாணம் மற்றும் விற்பனைத்துறையுடன் எவ்வித தொடர்புமற்ற இரண்டு கம்பனிகளுக்கு மாற்றினார் என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வொஷிங்டனின் குடிவரவு மற்றும் சுங்க நடவடிக்கைகளுக்கான உள்நாட்டுப் பாதுகாப்பு விசாரணைப்பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.