அவசரகாலச்சட்டப் பிரகடனத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

By T. Saranya

02 Apr, 2022 | 08:26 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்சட்டம் உடனடியாக மீளப்பெறப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் எதிர்கட்சிகள், அதற்குப் பாராளுமன்றத்தில் தமது எதிர்ப்பை வெளியிடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த வியாழக்கிழமை மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அதுமாத்திரமன்றி நேற்றைய முன்தினம் மொரட்டுவைப் பகுதியிலும் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று முன்தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் அவசரகாலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அவசரகாலச்சட்ட அறிவிப்பை அரசாங்கம் உடனடியாக மீளப்பெறவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் எதிர்க்கட்சிகள், அச்சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தவிருப்பதாகவும் அறிநித்துள்ளன.

அதன்படி அவசரகாலச்சட்டம் தொடர்பில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வினவியபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

நாட்டுமக்களின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்கும் வகையில் அவசரகாலச்சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, மக்களின் பிரச்சினைகளை அடக்கும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாட்டை நாம் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம். மக்கள் எந்தவொரு தீவிரவாத செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை.

மாறாக அவர்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு மாத்திரமே கோருகின்றார்கள். எனவே தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தும் அதேவேளை, அதற்குப் பாராளுமன்றத்தில் எமது எதிர்ப்பை வெளியிடுவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்றார்.

அதேவேளை இதுகுறித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

அவசரகாலப்பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெறவேண்டும் என்று அப்பதிவில் வலியுறுத்தியிருக்கும் அவர், 'அரசுக்கெதிரான எதிர்ப்பினையும் போராட்டங்களையும் இதன்மூலம் அடக்கமுடியாது. இந்தத் தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்' என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியும் அவசரகாலச்சட்டப்பிரகடனத்திற்கு அதன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தற்போது நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளோ அல்லது தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலோ இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, பொதுமக்கள் முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான நெருக்கடிகளுக்குத் தீர்வை வழங்கமுடியாத அரசாங்கம் அதன் இயலாமையை மறைத்துக்கொள்வதற்காகவே இவ்வாறான உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றது என்று குறிப்பிட்டார். தமது கட்சி கடந்த காலங்களிலும் அவசரகாலச்சட்டத்திற்கு எதிர்ப்பை வெளிக்காட்டி வந்திருப்பதாகக்கூறிய அவர், இம்முறையும் பாராளுமன்றத்தில் அதனை எதிர்க்கத் தயார் என்றார்.

மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி இவ்விடயம் தொடர்பான தமது நிலைப்பாட்டை டுவிட்டர் பதிவொன்றின் ஊடாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்சட்டம் அநாவசியமானது என்பதுடன், அது உடனடியாக மீளப்பெறப்படவேண்டும்.

பெங்கிரிவத்தவில் ஏற்பட்ட அமைதியின்மை நிலையுடன் தொடர்புபட்ட சிலர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதுவரையில் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் வன்முறைகளற்ற வகையிலேயே முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

எதிர்வருங்காலங்களில் அமைதியின்மைநிலை தோற்றம்பெற்றால், அதனைக்கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான அதிகாரங்கள் பொலிஸாரின் வசமுள்ளது என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை ஆளுந்தரப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவனும் அவசரகாலச்சட்டப் பிரகடனத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right