1961 ஆம் ஆண்டில் சர்வதேச நாடக நிறுவனம் என்ற அமைப்பு நாடகக்கலை மற்றும் கலைஞர்கள் மீதுள்ள அக்கறையால் " உலக நாடக தினம்” ஒன்றை ஆண்டுதோறும் அனுசரிக்க முடிவுசெய்தது. 1962 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சான்சாக்டோ ”தேசங்களின் அரங்கு” என்ற தலைப்பில் உலக நாடக தினத்திற்கான முதல் செய்தியை வழங்கினார். அதன் மரபு தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இலங்கையில் உலக நாடக தினமானது வருடம் தோறும் மலையக தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, கொண்டாடப்பட்டுள்ளது. மலையகத்தின் சில பாடசாலைகளில் உலக நாடக தினம் கொண்டாடப்பட்டதும் குறிப்பிடப்படவேண்டிய விடயமே. இலங்கையின் நாடக வளர்ச்சியில் மலையகத்தின் நாடக பங்களிப்பும் அபரிவிதமானது. அச்சமுகத்தின் கலை கலாச்சார பண்பாட்டு அடையாள குறீயீடுகளாக அவை காணப்படுகிறது. வரலாற்றில் பல நாடகங்கள் மலையக்கில் அரங்கேற்றப்பட்டிருந்தாலும் துரதிஷ்டவசமாக அவை எழுத்துவடிவில் பாதுகாக்கப்படவில்லை என்பது வெறும் அவலம். சமகாலத்தில் அவை  வாய்மொழி ஆவணமாக நமக்கு கிடைக்கக்கூடியதாய் உள்ளது.

அந்த வகையில் முதன் முறையாக மலையக மண்ணில்  உலக நாடக விழா "The Theater Loop" ன் ஏற்பாட்டில் நுவரெலியா பரிசுத்த திரித்துவக் கல்லூரி நாடக மன்றம் இணைந்து நாடக விழாவை நடத்தியது.

 வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்வுகளை நாடகம் திரும்ப இந்த சமூகத்தின் மேடைக்கே காட்டும். அது சந்தோசத்தை, அறிவை, சிந்தனையை, உணர்வை மனித சமூகத்திற்கு கொடுத்துக்கொண்டே இருக்கும். நாடகத்தோடும், நாடக அனுபவங்களோடும் வாழ்வதென்பது அலாதியானது. நாடகம் நம் வாழ்வை கவித்துவமாக்கி அதை ரசித்துக் காதலிக்க வைப்பதோடு நம்முள்ளே ரசவாதத்தை ஏற்படுத்தி செவ்வனே செயற்பட வைக்கும். சமூக மாற்றத்தின், அசைவியக்கத்தின் தூண்டுகோளாக இயங்குகிறது. இச்செயல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின்  சௌமியமூர்த்தி கலையரங்கத்தில் கடந்த மாதம் 27 ஆம் திகதி உலக நாடக விழா இடம் நடைபெற்றது.

மண்டபம் முழுவதும் பார்வையாளர்கள் கொட்டிக்கிடக்க பார்வையாளர்களின் கைத்தட்டல்களோடு மங்கள விளக்கேற்றல் நிகழ்வோடு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது The Theater Loop உறுப்பினர் செ.ரஜீவ் அவர்களின் வரவேற்புரையோடும், பாடசாலையின் அதிபர் ரவிச்சந்திரன் அவர்களின் தலைமை உரையோடும், பாடசாலை மாணவ தலைவர்களின ஒருவரான விஸ்வநாதன் பிரவீனா அவர்களின் உலக நாடக தின செய்தியோடும் உலக நாடக விழா இனிதே ஆரம்பிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக உலக நாடக தின நிகழ்வில் முதல் நாடகமாக ஆசிரியர்  பெ.சண்முகநாதன் அவர்களின் நெறியாள்கையில் “வையத்தலைமை கொள்” என்ற தலைப்பில் நாடகம் அரங்கேற்றப்பட்டது. மனிதத்தன்மையும் சமூக அவலங்களையும் பிரதானமாக கொண்டு அரங்கேற்றப்பட்ட நாடகமானது ஒற்றுமை, மனித நேயம், கல்வி என கலந்து புதிய சமூகம் படைப்போம் என்ற ஆழமான கருத்தின் வழியே சமூக சீர்திருத்த வழிகளையும், சமூக அவலங்களையும் அழகாக நாடக கலைஞர்களின் வழியே நாடகம் எடுத்துக் காட்டியது. நாடக நிறைவின் பின் நெறியாளர் பெ.சண்முகநாதன் அவருக்கு  மத்திய மாகாண நுண்கலைத்துறையின் உதவி கல்வி பணிப்பாளர் திருமதி.கலா ஹாரிஸ் அவர்களினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நுஃபரிசுத்த திரித்துவ கல்லூரியின் உப அதிபரும், நாடக செயற்பாட்டாளருமான கி.திருச்செல்வன் அவர்களின் நெறியாள்கையில் “விட்டில்” என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. மலையக வரலாற்றில் தமது முன்னோர்களின் வருகையையும், அதன் துயரங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இந்நாடகம் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீர் சொரிய இனிதே நிறைவு பெற்றது. இந்நாடக நிகழ்வின் பின் விட்டில் நாடகத்தின் பிரதான பங்கினை வகித்த மாணவன் ஆர்.கவிஷானிற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நாடகத்ததுறை விரிவுரையாளர் மெ.கேதீஸ்வரன் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

தொடர்ந்து நு/பரிசுத்த திரித்துவ நாடக மன்றம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளராக கடமையாற்றும் மெ.கேதீஸ்வரன் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் செல்லதுரை ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வின் பிரதான அம்சமாக "நாடக முதுசம்"  விருது வழங்கும் நிகழ்வில் ரம்பொடையை சேர்ந்த நாடக கலைஞர் மலையக வாசுதேவன், ஓய்வு பெற்ற முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் மு.நாகலிங்கம், கண்டி மெல்கடயை வசிப்பிடமாகக் கொண்ட கூத்துக் கலைஞர் மருதய்யா ஆகியோர் மேடையில் வீற்றிருக்க மத்திய மாகாண நுண்கலை துறையின் உதவி கல்வி பணிப்பாளர் திருமதி.கலா ஹாரிஸ், பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் அதிபர், உப அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயலாளார் திரு.ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து பறை ஒலிக்க பார்வையாளர்களின் பெரும் கரகோஷத்துடன் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டார்கள்.

மூன்றாவது நாடகமாக இ.லோகநாதன் அவர்களின் “மனசாட்சி ஓடுது பிடி” என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டு பஸ் தரிப்பிடத்தை களமாக்கி மனிதம் பேசும் கருப்பொருளில் சமூக சிந்தனையோடும், சமூகத்தை பார்த்து கேள்வி கேட்கும் முகமாக இவன் நாடகம் மேடையேற்றப்பட்டது. அரங்கேற்றத்துக்கு பின் மனசாட்சி ஓடுது பிடி நாடகத்தின் நெறியாளர் லோகநாதன் மற்றும் அவரின் குழுவிற்கு கொட்டக்கலை ஆசிரிய கலாசாலையின் அதிபர் திருமதி சந்திரலேகா கிங்ஸ்லி அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

தேநீர் இடைவேளைக்குப் பின் நாடக ஆசிரியரும் அரங்க செயற்பாட்டாளருமாகிய வி.சுதர்சன் அவர்களின் “பரதனும் சீதையும்” என்ற நாடகத்தோடு அரங்கு தொடர்ந்தது. தவறுதலான புரிதலினால் ஏற்படும் அசம்பாவிதங்களை நகைச்சுவையோடு சிந்தனைகளை கிளர்ந்து விடும் வகையிலும் நாடகம்  அமையப் பெற்றிருந்தது. நாடக அரங்கேற்றத்துக்கு பின் சிறிபாத கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் ஓவியர் தாஸ் அவர்களினால் பரதனும் சீதையும் என்ற நாடகத்தின் நெறியாளர் வி.சுதர்சன் உட்பட அவரின் நாடக குழுவிற்கு விருது வழங்கப்பட்டது.

உலக நாடக தின விழாவின் இறுதி நாடகமாக அரங்க செயற்பாட்டாளர் நாடக கலைஞர் மு.காளிதாஸ் அவர்களின் நாடக கலைஞர் என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. ஒரு நாடக கலைஞனின் வாழ்கியல் போராட்டம், இன்பம், துன்பம், நினைவுக் குறிப்புப் பயணங்களை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்த இந்நாடகம் கண்ணீரோடு இனிதே நிறைவு பெற்றது. அரங்கேற்றத்திற்கு பின் கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் உதவி அதிபரும் பேராதனை பல்கலைகழகத்தின் வருகைதரு விரிவுரையாளருமாகிய ஜெ. சற்குருநாதன் அவர்களினால் நாடகக் கலைஞன் என்ற நாடகத்தின் நெறியாளர் மு.காளிதாஸ் மற்றும் அவரின் குழும்பத்திற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்து நாடகங்கள் நிறைவுற்ற பின் கொட்டகலை ஆசிரியை கலாசாலையின் அதிபர் சந்திரலேகா கிங்ஸ்லி, தோமஸ் கிங்ஸ்லி, ஓய்வுபெற்ற முன்னால் அதிபர் செல்லதுரை, பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் அதிபர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் தனது வாழ்த்துறைகளையும் தங்களின் அனுபவ பகிர்வுகளையும் பார்வையாளர்களோடு பகிர்ந்துகொண்டார்கள்.

மலையக மண்ணில் மலையகக் கலைஞர்களால் இடம்பெற்ற உலக நாடக தின விழாவின் இறுதி நிகழ்வாக The Theater Loop உறுப்பினர்களில் ஒருவரான ஆசிரியர், நாடக செயற்பாட்டாளர் வி.சுதர்சன் அவர்களின் நன்றி உரையோடு இனிதே இவ்விழா நிறைவுப்பெற்றது.

மா. ஜீவன்ராஜ்