பேலியகொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பேலியகொடை - மீன் சந்தைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் முறையே 30, 34, 35, 46 மற்றும் 48 வயதான கொழும்பு 8, வத்தளை, களுபோவில,  பேருவளை மற்றும் மக்கோன பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 3,990,000 சிகரெட்டுகள் மற்றும் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்ட இரண்டு லொறிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட ஐவரும் நேற்றைய தினம் புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.