கலை வடிவமாக மாற்றம் பெற்ற திருப்புகழ் இசை வழிபாடு

02 Apr, 2022 | 12:05 AM
image

‘திருப்புகழ் அன்பர்கள்’ முத்துஸ்வாமி

இன்றைய காலகட்டத்தில் - கொரோனா தொற்று பாதிப்பிற்கு பின்னரான காலகட்டத்தில் மக்களின் மனமாற்றத்திற்கும், மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கும் சிறந்த வடிகாலாக இசை வழிபாடு திகழ்ந்தது என்று சொன்னால் அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இசை வழிபாடு என்பது பெரும்பாலும் கூட்டு பிரார்த்தனையாகவும், சேர்ந்திசையாகவும் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், கர்நாடக இசை ராகங்களில் வடிவமைக்கப்பட்ட திருப்புகழை, அனைத்து மேடைகளிலும் ஒரே ஒருமித்த குரலில் ஒலித்து, இசை வழிபாடு என்பதற்கு புதிய பொருளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் ‘திருப்புகழ் அன்பர்கள் குழு’.

இந்நிலையில் இந்த குழுவின் சென்னை கிளை செயலாளராக பணியாற்றி வரும் ஆன்மீக வழிகாட்டி முத்துசுவாமி அவர்களை சங்கமத்திற்காக சந்தித்தோம்.

திருப்புகழ் அன்பர்கள் உருவானதன் பின்னணி..?

‘திருப்புகழ்’= முருகப்பெருமானின் அருள் அமுதத்தை பரப்பும் இலக்கியப் பெட்டகம்.

திருப்புகழை திரையிசையில் பயன்படுத்தி பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.

திருப்புகழை அதன் அடர்த்தியான பக்தி சுவையை உணர்ந்த ஆன்மீக அன்பர்கள் மற்றும் முருக பக்தர்கள் தனித்தனி குழுவாக உருவாகி, இதனை என்றும் குன்றா புகழுடன் மந்திரமாக உச்சரித்து வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆறுமுகமங்கலம் எனும் ஊரைச் சேர்ந்த குருஜி என எங்களால் அன்புடன் அழைக்கப்படும் மறைந்த முருகபக்தர் ஏ. எஸ். ராகவன் அவர்களின் வாழ்க்கையில் முருகனின் அருளால் அற்புதம் நடைபெற்றது. 

இந்து சமய மக்களின் வழிபாடுகளை ஒருங்கிணைத்த ஆன்மீக மகான் ஆதிசங்கரர் ஒருமுறை வயிற்றுவலியால் அவதிப்பட்டபோது, அவருக்கு திருச்செந்தூர் முருகன் அருளால் குணமடைந்தார்.

அந்த தருணத்தில் அவர் முருகனின் அருளை உணர்ந்து, முருகன் மீது ‘சுப்பிரமணிய புஜங்கம்’ என்ற பாடலை இயற்றினார். சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்தப் பாடல் பிறகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

இந்நிலையில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட முருக பக்தரான ஏ. எஸ். ராகவன், முறையாக இசை பயிற்சி எடுத்துக்கொண்டு மும்பையில் அரசாங்க அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஒரு முறை மூட்டு வலியால் அவர் அவதிப்பட்ட போது அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர், ‘திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹார திருவிழாவில் பங்குபற்றி, மனமுருகி முருகனை தியானித்து திருப்புகழைப் பாடுங்கள்.

உங்களுக்கு அவனின் அருள் கிட்டும்.’ என உரைத்தார். அவர் தயக்கமும், பக்தியும், நம்பிக்கையும் கலந்து சூரசம்ஹார தினத்தன்று திருப்புகழை பாடினார்.

சிறிது நேரத்தில் அவர் தன்னையும் அறியாமல் பாடிக் கொண்டிருக்கும் பொழுது கடற்கரையிலிருந்து ஆலய வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

திருப்புகழைப் பாடிய பின்னர் தான், அவர் தான் நடந்து வந்த நிகழ்வை எண்ணி பார்த்து, வியந்து முருகனின் அருளை எண்ணி கண்ணீர் உகுத்தார்.

அந்த தருணத்திலிருந்து முருகனின் புகழை பாடுவதை தவிர தன்னுடைய வாழ்க்கைக்கான இலக்கு எதுவும் இல்லை என்று நிர்ணயித்து, புதுதில்லியில் சில நண்பர்களுடன் இணைந்து ‘திருப்புகழ் அன்பர்கள்’ என்ற இசை வழிபாட்டு குழுவை உருவாக்கினார்.

அன்று முதல் இன்று வரை அவர் உருவாக்கி வடிவமைத்த திருப்புகழை இசை வழிபாடாக நடத்தி வருகிறோம்.

இசை வழிபாட்டை இசை சார்ந்த கலை வடிவமாக மாற்றி அமைத்ததன் பின்னணி குறித்து..?

எம்முடைய குருஜி சங்கீத ஞானம் உடையவர் என்பதால், திருப்புகழை கர்நாடக ராகத்தின் அடிப்படையில் வடிவமைத்தார்.

சங்கீத ஞானம் உடையவர்கள் ஒரு பாடலுக்கு வெவ்வேறு தாளத்தில் மெட்டமைத்து பாடுவார்கள். ஆனால் எங்களுடைய குருஜி இசை அமைப்பாளர் அல்ல.

காலையில் எழுந்து முருகனின் திரு உருவத்திற்கு முன் அமர்ந்து தியானித்துக் கொண்டே இருப்பார். அந்த தருணத்தில் அவருக்குள் தோன்றும் ராகத்தை பாடலாக வடிவமைப்பார்.

கடந்த 40 ஆண்டு காலமாக அவரின் சீரிய முயற்சியில் 503 திருப்புகழுக்கு இசையமைத்து பாடியிருக்கிறார்.

இந்த இசை வடிவத்தை அவருடைய சீடர்களான நாங்கள், வணிகமயப் படுத்தாமல், எங்களுடைய இசை வழிபாட்டிற்கு ஆர்வமுடன் வந்து திருப்புகழை கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக கற்பிக்கிறோம்.அவர்களும் இதனை கற்று, குருஜி வடிவமைத்து பாடிய தாளத்திலேயே கலை வடிவமாக பாடி வருகிறோம். 

திருப்புகழை வெவ்வேறு குழுவினர் வெவ்வேறு வடிவங்களில் பாடுகிறார்கள். இதில் திருப்புகழ் அன்பர்கள் குழு எந்த புள்ளியில் மாறுபடுகிறீர்கள்?

திருப்புகழ் அன்பர்கள் என்ற தன்னார்வ ஆன்மீக அமைப்பின் சார்பில் திருப்புகழ் இசை வழிபாடு என்ற நூலை பிரத்யேகமாக பதிப்பித்து வெளியிட்டிருக்கிறோம்.

இந்த நூலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளிலும், உகந்த நட்சத்திர தினமான சஷ்டி, கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட நாள்களில் அருகிலுள்ள ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகன் சன்னதியில் எங்கள் குழுவினர் இசை வழிபாட்டை கூட்டு பிரார்த்தனையாக நடத்துவார்கள்.

பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு ஆலயங்களில் எங்கள் குழுவினர் இசை வழிபாட்டை நடத்தி வருகிறோம். அருணகிரிநாதர் ஜெயந்தி நாளன்று திருப்புகழை விசேட இசை நிகழ்வாக நடத்தி வருகிறோம். 

திருப்புகழை ஒவ்வொரு குழுவினரும் வெவ்வேறு ராகத்தின் வெவ்வேறு பாடக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால் இசை வழிபாட்டிற்காக எங்களுடைய திருப்புகழ் அன்பர்கள் எப்போது ஒருங்கிணைந்தாலும்‘குருஜி வடிவமைத்த இசை ராகத்தில் தான் திருப்புகழை பாடுவோம்.

அவர் வடிவமைத்த நிகழ்ச்சி நிரலைத்தான் பின்பற்றுவோம். படிவிழா, ஆனி மூலம், அமாவாசை வழிபாடு என எந்த நிகழ்வாகயிருந்தாலும் அவர் கட்டமைத்த முறைமையில் தான் இசை வழிபாட்டை மேற்கொள்வோம். 

அதே தருணத்தில் ஒரு இசை வழிபாட்டிற்காக ஒதுக்கப்படும் மூன்று மணித்தியாலத்திற்குள் ஆறுபடை வீடு மீதான பாடல்கள் முதன்மை பெறும்.

நன்கு பயிற்சி பெற்ற ...முருக பெருமான் மீது பக்தி கொண்ட... இசை ஆசிரியர்களுக்கு நாங்கள் கற்பித்து, ஆலயங்களில் பாட அனுமதிப்போம். அவர்கள் முதன்மையாக பாட அவர்களை பின்பற்றி ஏனைய குழுவினர் பாடுவர்.

திருப்புகழை இசை வழிபாடாக பிரச்சாரம் செய்வதில் உள்ள சவால்கள் குறித்து..?

எங்களுடைய குருஜியின் ஆணைக்கேற்ப திருப்புகழ் அன்பர்கள் குழுவில் இணையும் முருக பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்பதால், மாதம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் திருப்புகழை பாட வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் மற்றும் திகதிகளில் மட்டுமே எங்களுடைய குழுவினர் இணைந்து இசை வழிபாட்டை மேற்கொள்கிறோம்.

விளம்பரதாரர்கள் மற்றும் ஆன்மீக புரவலர்களின் நிதி உதவிகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

ஏனெனில் ஏதேனும் ஒரு கட்டத்தில் குருஜி வடிவமைத்த இசை வழிபாட்டிற்கு சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நாங்கள் நிதி உதவியை முழுமையாக ஏற்க மறுக்கிறோம்.

ஆனால் முருகனின் அருளால் இதுவரை திட்டமிட்ட இசை வழிபாடு எதுவும் தடை ஏற்பட்டதாக வரலாறு இல்லை.

இதன் காரணமாக எங்கள் குழுவில் இணையும் முருக பக்தர்களுக்கு இசை வழிபாட்டின் மேன்மையையும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழின் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்கிறோம்.

புதுதில்லியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது பெங்களூரு, சென்னை என கிளைகளை தொடங்கி, உலகம் முழுவதும் முருகனின் திருப்புகழ் இசை வழிபாட்டின் மூலம் பரவ செய்கிறோம்.

திருப்புகழை கர்நாடக இசை வடிவத்தில் மெட்டமைத்தாலும், கர்நாடக இசையில் அரிய ராகங்களாக கருதப்படும் தர்பாரி கானடா, தேவ மனோகரி, யதுகுல காம்போதி, சுபபந்துவராளி, சிம்மேந்திர மத்யமம் உள்ளிட்ட 110 ற்கும் மேற்பட்ட ராகங்களில் இயற்றப்பட்டிருக்கிறது.

இதனை பாடும்போது பாடுபவர்களை விட கேட்பவர்களுக்கு இசையின் ஊடாக திருப்புகழின் மகிமை உன்னத நிலைக்கு சென்றடைகிறது.

சந்திப்பு: கும்பகோணத்தான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right