நாம் இலங்கையில் தான் இருக்கின்றோமா அல்லது அரபு நாடொன்றில் இருக்கின்றோம் என்ற சந்தேகம் நேற்றிரவு பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

இதுவரை காலம் எரிபொருள் இல்லை. மின்சாரம் இல்லை. எரிவாயு இல்லையென்று வீதிவீதியாக கண்ணீர் வடித்த மக்களைத் தான் பலரும் பார்த்தது உண்டு.

ஆனால் திடீரென நேற்று இரவு சுமார் 7.30 மணிக்குப் பின்னர் நுகேகொடை மிரிஹான பகுதியில் ஒன்று கூடிய சிறுதொகை மக்கள் அரசுக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் விலையேற்றத்தை கண்டித்து கோஷம் எழுப்பத் தொடங்கினர்.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் வாசஸ்தலம் அமைந்துள்ள இப்பகுதியானது பாதுகாப்பானதும் அமைதியானதும் ஆகும். இந்நிலையில், மழைத்துளி வெள்ளம் போல் திரண்டது போன்று சற்று நேரத்தில் மக்கள் அலை மோதத் தொடங்கியதுடன் நிலைமை கட்டுமீற ஆரம்பித்தது.

சுமார் 10 மணி அளவில் போராட்டம் ஆக்ரோஷம் அடையவே, படையினர், பொலிஸார் எனப் பலரும் தங்கள் படைப்பிரயோகங்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர். 

இரு தரப்பு மோதல்கள் மற்றும் இழுபறிகள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடி ஒலி, ஒளி ஒளிபரப்பானதும் நிலைமை கட்டுமீறி சென்றது.

இதனைப் பார்த்தால்  அரபு வசந்தம் போல் இருந்ததாகவும் இவர்கள் தானாகக் கூடிய கூட்டம் என்றும் பலரும் பேசத் தொடங்கினர். பஸ் வண்டி ஒன்று, ஜீப் வண்டி ஒன்று என வாகனங்கள் சில தீ வைத்து எரிக்கப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர், பொலிசார் பெரும் கஷ்டங்களுக்குள்ளாக நேர்ந்தது. அவர்களிலும் 6 பேர் காயமடைய நேரிட்டது. இதனை அடுத்து கொழும்பு மாவட்டத்தில் உடனடியாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.

இது இரவு வேளை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் என்பதாலும் மின்சாரம் இல்லாததன்  காரணத்தினாலும் பலருக்கு தெரியாது. காலையில் எழுந்து விழித்தபோதே இந்த சம்பவத்தை பலரும் பார்த்ததுடன் அதிர்ச்சியும் அடைந்தனர்.

அதுபோக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் தொடரத்தொடர  மக்கள் அனல் பூத்த நெருப்பாக உள்ளனர். எதுவாக இருப்பினும் இது ஆரம்பமா ? இல்லை முடிவா ? என்பதை காலம் தான் கூற வேண்டும்.