இலங்கையின் பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்கு பிரித்தானியா, தென்கொரியா, எகிப்து ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு

By T Yuwaraj

31 Mar, 2022 | 11:20 PM
image

(எம்.மனோசித்ரா)

வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.

இன்று வியாழக்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லோர்ட் மைகல் நெஸ்பி , தென்கொரிய அரச கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சர் கோ யூன் - சோல் மற்றும் இலங்கைக்கான எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லே ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பின் போது புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்கு அரசாங்கத்தின் ஆர்வத்தை மைகல் நெஸ்பி பாராட்டினார். சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களை மின் உற்பத்தியில் இணைப்பதற்கு பிரித்தானியாவின் ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லோர்ட் நெஸ்பி தெரிவித்தார்.

லோர்ட் எழுதிய நூல் ஒன்றை ஜனாதிபதிக்கு வழங்கி வைத்த அவர், தனது இளமைக் காலம் முதல் இலங்கையுடன் இருந்த நெருங்கிய உறவை நினைவுகூர்ந்தார். பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை சார்பாக குரல் எழுப்பி ஒத்துழைப்பை வழங்கிய நெஸ்பிக்கு ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

தென் கொரியாவில் இலங்கைக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில், தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரச கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சர் கோ யூன் - சோல் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.  தென் கொரிய தொழில் முயற்சியாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதாகவும், கொரியாவில் இருந்து இலங்கைக்கு அதிநவீன தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தவும் தன்னால் இயன்ற ஒத்துழைப்பை வழங்குதாக கோ யூன்-சோல் தெரிவித்தார்.

தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு கிடைக்கும் அபிவிருத்தி உதவிகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி , இலங்கையில் உள்ள மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்கு உள்ள வாய்ப்பையும் சுட்டிக்காட்டினார்.

விசேட சுற்றுலா வலயங்களை அமைப்பதன் மூலம் எகிப்திய சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை இலங்கை ஈர்க்க முடியும் என இலங்கைக்கான எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான 65 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்த தூதுவர், சர்வதேச மாநாடுகளில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right