பிம்ஸ்டெக் மாநாட்டின் பின்னர் ஜனாதிபதியை சந்தித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள்  

31 Mar, 2022 | 10:40 PM
image

(எம்.மனோசித்ரா)

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பங்களாதேஷ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

மிக சிறப்பான முறையில் மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்கு ஜனாதிபதிக்கு அவர்கள் நன்றி தெரிவித்ததோடு , ஜனாதிபதியின் உரைக்கும் பாராட்டுக்களை தெரிவித்தனர். 

கொவிட் தொற்றினால் தமது நாடுகள் எதிர்கொண்ட நெருக்கடிகள் தொடர்பில் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

இலங்கையில் மருத்துவக் கல்வி மிகவும் உயர் மட்டத்தில் இருப்பதாகக் கூறிய பூட்டான் வெளிவிவகார அமைச்சர் தண்டி டோர்ஜி, இலங்கையில் மருத்துவக் கல்வி கற்க அதிகளவான மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

வெளிநாட்டு மாணவர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் வீசாக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அமைச்சர் முன்வைத்த கோரிக்கை ஜனாதிபதியின் விசேட கவனத்திற்குரியது.

இயற்கை விவசாயத்தில் நாட்டம் கொண்ட பூடான் நாட்டு வெளிவிவகார அமைச்சர் ,  டோர்ஜி அதன் செயல்திறனை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். 

நேபாள வெளியுறவு அமைச்சர் கலாநிதி நாராயண் கட்கா, இரு நாடுகளுக்கும் இடையிலான 65 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை இந்த சந்திப்பின் போது நினைவு கூர்ந்தார்.

பொதுவான, கலாச்சார மற்றும் மத பாரம்பரியம் கொண்ட நாடாக இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய  நாராயண், பௌத்த சுற்றுலாப் பயணிகள் நேபாளத்திற்கு வருகை தரலாம் என்றும் கூறினார்.

பங்களாதேஷின் பொருளாதார முன்னேற்றம் குறித்து பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ. கே. அப்துல் மொமனிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

பங்களாதேஷிலுள்ள 50 000 இலங்கை தொழிலாளர்கள் அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் வகிக்கும் பங்கிற்கு அமைச்சர் ஜனாதிபதியிடம் நன்றி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right