(எம்.ஆர்.எம்.வஸீம்)

கூட்டு அரசாங்கம் பிரிவினைவாத கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற இன மோதல்களுக்கு இதுவே காரணமாக இருந்தது என  முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

லங்கா சமசமாஜ கட்சி யின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,  ஐக்கிய தேசிய கட்சி கூட்டு அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்கள் காரணமாக அதற்கு சமமான நோய் நாட்டுக்குள் பரவி வருகின்றது. இந்த கூட்டு அரசாங்கம் அச்சுறுத்தல் மிக்க அரசியல் பயணம் ஒன்றை மேற்கொள்ளவே திட்டமிட்டு செல்கின்றது. 

அத்துடன் இந்த அரசாங்கம் சர்வாதிகார நாடுகளுக்கு அடிமையாகும் கொள்கையையே பின்பற்றி வருகின்றது.  திருகோணமலையில்  அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு  இடமளிக்கப்படுகின்றது. அத்துடன்  400 மில்லியன் டொலர் செலவழித்து ஜெட் விமானம் கொள்வனவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதேபோன்று நவீன ரக ஆயுதங்களை கொள்வனவு செய்ய 300 மில்லியன் டொலர் செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது நாட்டின் பாதுகாப்புக்கு அல்ல. மாறாக இந்தியாவின் சமுத்திர வலையமைப்பை செயற்படுத்துவதற்காகும்.

எனவே  அரசாங்கம் மேற்கொண்டுவரும் பிரிவினைவாத கொள்கை காரணமாக நாடு மீண்டும் அராஜக நிலைமைக்கு இட்டுச்செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்தவகையிலும்  ஆதரவளிக்க முடியாது . அத்துடன் அரசாங்கம் சர்வாதிகார நாடுகளுக்கு அடிமைப்பட்டு செயற்படுவது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்றார்.