(நா.தனுஜா)
கொவிட் - 19 வைரஸ் தொற்றுப்பரவலினால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட மிகமோசமான நெருக்கடிகள், பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தை நன்கு உணர்த்தியுள்ளன.
எனவே தற்போதைய பூகோள மாற்றங்களுக்கு மத்தியில் பிராந்திய நாடுகளின் ஒருமித்த குரலாக பிம்ஸ்டெக் அமைப்பு இயங்கவேண்டும்.
அதுமாத்திரமன்றி தீவிரவாத செயற்பாடுகள், ஆட்கடத்தல் உள்ளிட்ட சவால்களை முறியடித்து பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பிம்ஸ்டெக் உறுப்புநாடுகள் புலனாய்வு அறிக்கைகள் மற்றும் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக்கொள்வது அவசியமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) 5 ஆவது அரசதலைவர்கள் மாநாடு புதன்கிழமை (30) கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
அந்தவகையில் மாநாட்டை மெய்நிகர் முறைமையின் ஊடாக ஆரம்பித்துவைத்து தொடக்கவுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
பிம்ஸ்டெக் அரசதலைவர்கள் மாநாடு இம்முறை முதற்தடவையாக மெய்நிகர்முறைமையில் நடைபெறுகின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகநாடுகள் அனைத்தும் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த அனைவருக்கும் இவ்வேளையில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை இந்தத் தொற்றுப்பரவலின் விளைவாக உலகநாடுகள் பலவும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக உலகசந்தையின் எரிபொருள் விலைகள் உயர்வடைந்திருப்பதுடன் அதிகரித்த வாழ்க்கைச்செலவின் காரணமாக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று உலகநாடுகளின் பொருளாதாரக்கட்டமைப்புக்கள் சரிவடைந்துள்ளன. இத்தகைய பொருளாதார நிலைவரங்களால் பெருமளவானோர் தொழில்வாய்ப்புக்களை இழந்திருப்பதுடன் பல மில்லியன் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன. எனினும் இந்த நெருக்கடிகள் உலகநாடுகள் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தை நன்கு உணர்த்தியுள்ளன.
இலங்கையைப் பொறுத்தமட்டில் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை மிகவும் செயற்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக வைரஸ் பரவலின் தீவிரத்தன்மையை ஓரளவிற்குக் குறைத்துக்கொள்ளமுடிந்ததுடன் நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும் தளர்த்தமுடிந்தது.
இருப்பினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 2020 - 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாடு முடக்கப்பட்டமையானது பொருளாதாரத்தின் அனைத்துத்துறைகளையும் வெகுவாகப் பாதித்தது.
குறிப்பாக சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்ததுடன் பொருளாதார நெருக்கடிகள் பணவீக்க அதிகரிப்பு மற்றும் கடன் நெருக்கடி ஏற்படுவதற்கு வழிவகுத்தது.
இவை மக்களின் இயலுமையை வெகுவாகச் சோதித்த போதிலும், இக்காலப்பகுதியில் பிராந்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களைப் பெரிதும் வரவேற்கின்றோம்.
பிம்ஸ்டெக் உறுப்புநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதானது அங்கத்துவ நாடுகளின் பொருளாதார மீட்சிக்கு மாத்திரமன்றி, பொருளாதார சுபீட்சத்திற்கும் இன்றியமையாததாகும்.
உறுப்புநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் வலுவான பிராந்தியம், சுபீட்சமான பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான மக்கள் ஆகிய விடயங்களை உறுதிசெய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
உலகநாடுகளுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்துவதிலும் வர்த்தக செயற்பாடுகளுக்கான வாய்ப்பை வழங்குவதிலும் வங்காள விரிகுடா மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. வங்காள விரிகுடாவை அண்மித்த கடல்மார்க்கத்திலேயே உலகப்பொருளாதாரம் தங்கியிருக்கின்றது.
எனவே இக்கடற்பிராந்தியத்தின் ஊடாக போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், தீவிரவாதம், மதரீதியான அடிப்படைவாதம் போன்ற குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இத்தகைய குற்றங்கள் இலகுவாக இடம்பெறக்கூடும் என்பதற்கு உதாரணமாக இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களைக் கருதமுடியும்.
எனவே இவ்வாறான தாக்குதல்களும் குற்றங்களும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பிராந்திய நாடுகள் புலனாய்வு அறிக்கைகள் மற்றும் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
அதேபோன்று பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளைச் சேர்ந்த மக்களில் பெருமளவானோர் மீன்பிடித்தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றனர்.
எனவே அவர்களைப் பாதுகாப்பதற்கு இப்பிராந்தியத்தில் இடம்பெறக்கூடிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், உரிய கடல் எல்லைக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடல் ஆகியவற்றைத் தடுப்பதுடன் அதனை முன்னிறுத்தி அனைத்துப் பிராந்திய நாடுகளும் ஒருமித்துச் செயற்படவேண்டியது அவசியமாகும்.
அடுத்ததாக இந்து சமுத்திரத்தில் இலங்கையின் அமைவிடம் கேந்திரநிலைய முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதுடன் பிராந்தியங்களுக்கு இடையிலான வர்த்தகத்தின் அடிப்படையாகவும் அது திகழ்கின்றது. அந்தவகையில் பிம்ஸ்டெக் உறுப்புநாடுகள் வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும்.
மேலும் நவீன தொழில்நுட்ப மேம்பாட்டை முன்னிறுத்தி முதலீடுகளை மேற்கொள்வதில் நாம் அதிக நாட்டம் காண்பித்துவரும் அதேவேளை, கல்வியின் மூலம் மனிதவளத்தின் இயலுமையை மேம்படுத்துவதிலும் அக்கறை கொண்டிருக்கின்றோம்.
மறுபுறம் சுற்றுலாத்துறையானது முக்கிய வருமான மார்க்கமாகக் காணப்படுவதுடன் பிராந்தியங்களுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் என்பது பிம்ஸ்டெக் அமைப்பின் பிரதான கொள்கையாக இருக்கவேண்டும்.
முன்னெதிர்வுகூறப்படாத சவால்களுக்கு சமூகம் எத்தகைய துலங்கலைக் காண்பிக்கும் என்பதை கடந்தகால நெருக்கடிகள் நன்கு புலப்படுத்தியுள்ளன. காலநிலைமாற்றத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் உறுப்புநாடுகளுக்கு (பிம்ஸ்டெக்) சவாலானதாக மாறியுள்ளன.
எனவே அவற்றை எதிர்கொள்வதற்கு அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்பதுடன், பிராந்தியத்தில் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். குறிப்பாக உணவுற்பத்தியின்போது இரசாயன உரப்பயன்பாட்டைக் குறைத்து, சேதன உரப்பயன்பாட்டை ஊக்குவிப்பது குறித்தும் கவனம்செலுத்தவேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் பிம்ஸ்டெக் அமைப்பின் எதிர்காலம் தெளிவானதாகவும் உறுதியானதாகவும் இருக்கின்றது. அந்தவகையில் பூகோள நிலைவரங்களுக்கு மத்தியில் உறுப்புநாடுகளின் ஒருமித்த குரலாக பிம்ஸ்டெக் அமைப்பு இயங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM