(நா.தனுஜா)
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைகள் சார்ந்த 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்புக்கள் மற்றும் புதிதாகக் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் ஐவருடன் நாட்டை வந்தடைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வாழ்த்தை ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தினார்.
இலங்கைக்கான பொருளாதார உதவியாக இவ்வாண்டு சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான இந்தியாவின் தீர்மானத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு அவசியமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்று உறுதியளித்தார்.
அண்மையில் அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை, பாதுகாப்பு மற்றும் சக்திவலு ஆகிய துறைசார் ஒத்துழைப்பு, மீனவர் பிரச்சினை ஆகிய விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகத்தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் இதன்போது இணக்கம்காணப்பட்டது.
அதேவேளை யாழ் கலாசார மையத்தை மெய்நிகர்முறைமையில் திறந்துவைப்பதற்காக அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கலந்துகொண்டார்.
இதன்போது அவர்கள் யாழ் கலாசார மையத்தில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்வைப் பார்வையிட்டதுடன் இந்திய, இலங்கை மக்கள் மற்றும் அவர்களின் நட்புறவை முன்னிறுத்திய விசேட வழிபாடும் இடம்பெற்றது.
மேலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் அதற்கான நிதியுதவி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
யாழ் கலாசார மையத்தை நிர்மாணித்தல் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 9 ஆம் சரத்தில் திருத்தம் மேற்கொள்வது பற்றிய கருத்துக்களும் இதில் பரிமாறப்பட்டன.
அத்தோடு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பின்போது, கொவிட் - 19 வைரஸ் பரவலின் தாக்கங்கள் தற்போதும் உணரப்பட்டுவரும் நிலையில் இரு அயல்நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்தொடர்புகளை விரிவுபடுத்தவேண்டியதன் அவசியம் குறித்து பசில் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், இந்தியா இலங்கையுடன் பேணிவரும் தொடர்பானது 'அயலகத்திற்கு முதலிடம்' மற்றும் 'பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும்' ஆகிய இரு கொள்கைகளையே அடிப்படையாக்கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன் இலங்கைக்கு அவசியமான தருணங்களில் இந்தியா ஆதரவு வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடனான சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவர்கள் முன்நிலையில் இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையில் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களில் கலப்பு மின்னுற்பத்தி செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை வழங்குவதற்கான ஒப்பந்தம், இலங்கையின் மீன்பிடித்துறை அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பான ஒப்பந்தம், காலி மாவட்டத்தின் 200 பாடசாலைகளில் நவீன கணினி கூடங்கள் மற்றும் சுயமாக உருவாக்கப்பட்ட பாடவிதான மென்பொருளுடன்கூடிய ஸ்மார்ட் பலகை ஆகியவற்றை ஸ்தாபிப்பது குறித்த ஒப்பந்தம், வெளிநாட்டு சேவைகளுக்கான சுஷ்மா சுவராஜ் நிலையத்திற்கும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி வழங்கல் நிலையத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் ஆகியவையே அவையாகும்.
அதேவேளை எச்.சி.எல் டெக்னோலொஜிஸ் மற்றும் இந்திய பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்புநிலையம் ஆகியவற்றைச் சென்று பார்வையிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர், தமிழ் அரசியல் கட்சிகள் பலவற்றின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். அதேபோன்று யாழ் கலாசார மையமானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ச்சியடைந்துவரும் ஒத்துழைப்புக்களுக்கான ஓர் உதாரணமாக விளங்குகின்றது.
வடமாகாண மக்களின் கலாசாரக்கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவதை நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்கச்செயற்திட்டமாக இதனைக் கருதமுடியும். இது இரண்டு மாடிகளுடனான நூதனசாலை, சுமார் 600 இற்கும் மேற்பட்டோருக்கு ஏற்றவாறான திரையரங்கு வசதிகளுடன் கூடிய கேட்போர்கூடம், கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற கட்டமைப்பு என்பவற்றை உள்ளடக்கி இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின்கீழ் நிர்;மாணிக்கப்பட்ட கட்டமைப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM