(நா.தனுஜா)
பிம்ஸ்டெக் அமைப்பைப்பொன்று ஏனைய பிராந்திய ரீதியான கட்டமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் அவற்றுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பவேண்டும்.
குறிப்பாக பிராந்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்வின் சுபீட்சம் ஆகியவற்றிலேயே பிம்ஸ்டெக் அமைப்பின் அங்கீகாரம் தங்கியிருப்பதால், அதனை முன்னிறுத்திச் செயற்படவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை பிம்ஸ்டெக் அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் துறைமுகங்களுக்கு இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாடுகளுக்கு இடையிலான பயணிகள் படகுசேவையை ஆரம்பித்தல் ஆகியவற்றின் மூலம் உறுப்புநாடுகளின் மக்களுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்தமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) 5 ஆவது மாநாடு திங்கட்கிழமை (28) கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
மூன்றுநாள் மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று (செவ்வாய்கிழமை) பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம்வகிக்கும் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் 18 ஆவது கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆரம்ப உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
இன்றைய அமைச்சுமட்டக்கூட்டமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளின் பங்களிப்பை உறுதிசெய்யும் வகையிலும் அமைந்துள்ளது. இந்தக்கூட்டம் நடைபெறவிருக்கும் அரச தலைவர்கள் கூட்டத்தில் செயற்திறனான விளைவுகளை ஏற்படுத்துவதற்கான முன்னோடியாக அமையும் என நம்புகின்றேன்.
பொருளாதார ரீதியில் நோக்குகையில் பிம்ஸ்டெக் அமைப்பு இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு கட்டமைப்பாக விளங்குகின்றது. குறிப்பாக வங்காள விரிகுடா மிகப்பெரிய பரப்பைக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்துசமுத்திரத்தில் இலங்கையின் கேந்திர அமைவிடமானது வெவ்வேறு பாரம்பரியங்களையும் கலாசாரத்தையும் கொண்ட பல்லின மக்களையும் நாடுகளையும் ஈர்க்கக்கூடியவாறானதோர் காந்தமாகக் காணப்படுகின்றது.
அதன்படி இம்முறை இலங்கையில் நடாத்தப்படும் இந்த பிம்ஸ்டெக் மாநாட்டின் மூலம் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த உயரதிகாரிகளும் இராஜதந்திரிகளும் ஓரிடத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
உலகப்பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இயலுமையுடைய பிம்ஸ்டெக் அமைப்பின் கொள்கைகளும் செயற்பாடுகளும் இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துத்தரப்பினரதும் நலனை முன்னிறுத்தியவையாக அமையும் அதேவேளை, இப்பிராந்தியத்தினதும் மக்களினதும் சுபீட்சத்தை உறுதிப்படுத்துவதே அதன் அடிப்படை நோக்கமாக அமையவேண்டும்.
அதேவேளை நாளை (இன்று) பிம்ஸ்டெக் சாசனம் ஏற்கப்பட்டு, பல்வேறு துறைகள் சார்ந்த ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படும்.
குறிப்பாக தொழில்நுட்ப வசதிகள் தொடர்பில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தின் ஊடாக உறுப்புநாடுகளுக்கு இடையில் நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக்கொண்ட ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அதேபோன்று கடந்தகாலங்களில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகநாடுகள் அனைத்தும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தன.
அந்த நெருக்கடியானது வைரஸ் பரவலுக்கு எல்லைகளோ, தடைகளோ இல்லை என்ற விடயத்தை உணர்த்தியது. அதுமாத்திரமன்றி இவ்வாறான சவால்கள் ஏற்படும்போது பிம்ஸ்டெக் போன்ற பிராந்திய ரீதியான கட்டமைப்புக்கள் பிராந்திய நாடுகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு அவற்றுக்கு முகங்கொடுக்கவேண்டியதன் அவசியத்தையும் புலப்படுத்தியது.
மேலும் அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான பல்துறைசார் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதில் கவனம்செலுத்த வேண்;டும் என்பதுடன் தனியார்துறையினரின் செயற்படுகளை விஸ்தரிப்பதும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும் அதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று நம்புகின்றோம்.
அடுத்ததாக நாடுகளுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தக்கூடிய முக்கிய துறையாக போக்குவரத்துத்துறை காணப்படுகின்றது. நவீன தொழில்நுட்பப் பங்களிப்புடன்கூடிய செயற்திறன்மிக்க போக்குவரத்துக்கட்டமைப்பைக் கொண்டிருப்பதானது பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும்.
அவற்றில் குறிப்பாக நாடுகளின் துறைமுகங்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதுடன் பயணிகள் படகுசேவையை ஆரம்பிப்பது நாடுகளுக்கு இடையிலான மக்களின் நல்லுறவு மேம்பாடடைவதற்கு வழிவகுக்கும்.
அத்தோடு பிம்ஸ்டெக் அமைப்பைப்போன்று ஏனைய பிராந்திய ரீதியான கட்டமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் அவற்றுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பிராந்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்வின் சுபீட்சம் ஆகியவற்றிலேயே பிம்ஸ்டெக் அமைப்பின் அங்கீகாரம் தங்கியிருக்கின்றது.
அந்தவகையில் உறுப்புநாடுகளின் நலனை முன்னிறுத்தி எதிர்வருங்காலங்களில் பிம்ஸ்டெக் அமைப்பினால் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM