(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து துரத்தியடிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கு 11 கட்சிகள் மாத்திரமின்றி பொதுஜன பெரமுனவிலுள்ள ஏனைய முற்போக்கான கட்சிகளும் , எதிர்கட்சிகளும் இணைந்து இணக்கப்பாடொன்றை எட்ட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எரிபொருள் விலை குறுகிய காலத்திற்குள் 3 மடங்காக அதிகரித்துள்ளது. மின்சார கட்டணத்தை 5 மடங்காக அதிகரிக்கவுள்ளனர். 

இந்த அரசாங்கத்திற்கு எதனையும் செய்ய முடியாது. எவ்வாறிருப்பினும் இவர்கள் செல்ல மாட்டார்கள் என்பது எமக்கு தெரியும். எனவே இவர்களை அனுப்புவதற்கான வேலைத்திட்டங்களை நாமே முன்னெடுக்க வேண்டும்.

11 கட்சிகள் மாத்திரமல்ல. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள முற்போக்கான கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். 

இவற்றுடன் இணைந்து எதிர்த்தரப்பினரும் பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்க வேண்டும். இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும்.

நாட்டைப் பாதுகாப்பதற்காக பொது வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம் என்றார்.