132 பேருக்கு சிவப்பு அறிவித்தல் : அதிகமானோர் டுபாயில் தஞ்சம் : கடந்த வருடம் மாத்திரம் 95 ஆயிரம் பேர் கைது 

28 Mar, 2022 | 07:27 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

போதைப் பொருள் கடத்தல் மற்றும் அது சார்ந்த பல்வவேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இலங்கைக்கு அவசியமான சுமார் 132 சந்தேக நபர்களைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல் எனப்படும் சர்வதேச பொலிஸ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

பொலிஸ் போதைப் பொருள்  ஒழிப்பு பணியகம்  உள்ளிட்ட பொலிஸ் திணைக்களம்  நீதிமன்றங்கள் ஊடாக திறந்த பிடியாணைகளைப் பெற்று, சர்வதேச பொலிஸாரிடம் முன் வைத்துள்ள  கோரிக்கைக்கு அமைய இந்த சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

 இது தொடர்பில், ஞாயிற்றுக்கிழமை ( 27) பொலிஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளரும், பொலிஸ் குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான  அஜித் ரோஹன  தகவல்களை வெளிப்படுத்தினார்.

 இவ்வாறு  சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள தேடப்படும் சந்தேக நபர்களில், அதிகமானோர் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரில் மறைந்துள்ளதாக விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

 செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்ததாவது,

' போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம், அதிரடிப் படையினர் தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கின்றனர். 

கடற்படை, இலங்கை சுங்கம்  உள்ளிட்டோருடன் ஒருங்கிணைந்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

 கடந்த வருடம் ( 2021) மட்டும், போதைப் பொருள்  குற்றச்சாட்டுக்களின் கீழ் 95 ஆயிரம் பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

அந்த ஹெரோயின், கஞ்சா மற்றும் ஏனைய  செயற்கை போதைப் பொருட்களை உடன் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 2021 ஆம் ஆண்டை பொறுத்தவரை 1630 கிலோ ஹெரோயினும், 15 அயிரம் கிலோ கஞ்சாவும்,  377 கிலோ ஏனைய  செயற்கை போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

 இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை ( 27) வரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 800 இற்கும் அதிகமாகும்.  

இக்காலப்பகுதியில் 360 கிலோ ஹெரோயின்,  2100 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒரு தொகை செயற்கை போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

 இவ்வாறான நிலையில், பொலிஸார் ஏனைய தரப்புடன் இணைந்து தொடர்ச்சியாக போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதுடன், இதன்போது கைதுசெய்யப்படும் நபர்களின் அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பில் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் புறம்பான சிறப்பு விசாரணைகளையும் முன்னெடுப்பர். அத்துடன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு பெறுமதியான சன்மானம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.' என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right