கிரிக்­கெட்டில் மைதான நடுவர் தீர்ப்பில் சந்­தேகம் இருந்தால் 3ஆவது நடு­வ­ரிடம் முறை­யி­டு­வ­தற்­காக டி.ஆர்.எஸ். முறை கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இந்­நி­லையில் இதே டி.ஆர்.எஸ். முடிவு ஹமில்­டனில் நடை­பெற்ற நியூ­ஸி­லாந்து – இலங்கை அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில் பெரிய சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இலங்கை அணி 55 ஓட்­டங்கள் முன்­னி­லை­யுடன் 2ஆவது இன்­னிங்ஸில் ஜய­சுந்­தர ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் வெளி­யே­றினார். இந்த விக்­கெட்தான் பிரச்­சி­னையை கிளப்­பி­யுள்­ளது.

நியூ­ஸி­லாந்து பந்துவீச்சாளர் பிரேஸ்வெல் 23ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் கரு­ணா­ரத்ன ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து ஜய­சுந்­தர களம் இறங்­கினார். இந்த ஓவரின் கடைசி பந்தை லெக் திசையில் வீசினார். இதை ஜய­சுந்­தர கிளான்ஸ் செய்ய முயன்றார். ஆனால், பந்து அவ­ரது கையு­றையை (Glove) உரசிச் சென்­ற­துபோல் சென்று விக்கெட் காப்­பா­ள­ரிடம் சென்­றது. இதற்கு நியூ­ஸி­லாந்து வீரர்கள் பிடி­யெ­டுப்­புக்­கான ஆட்­ட­மி­ழப்பை கேட்­டனர். ஆனால், மைதான நடுவர் பால் ரிபெல் மறுத்து விட்டார்.

ஆனால், ரிவியூ மூலம் 3ஆவது நடு­வ­ரிடம் முறை­யிட்­டனர். அப்­போது ஸ்னிக்கோ மீட்டர் மற்றும் ஹாட்ஸ்பாட் முறையில் ரிப்ளே செய்து பார்த்­ததில் பந்து கையு­றையில் பட்டு சென்­ற­தாக தெரி­ய­வில்லை. ஆனால், 3ஆவது நடுவர் ரிச்சார்ட் கெட்­டில்­பொரோவ் டி.ஆர்.எஸ். முறையில் ஆட்­ட­மி­ழப்பு என அறி­வித்தார்.

இதனால் ஆதங்கம் அடைந்த இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக்க ராமநாயக்க டி.ஆர்.எஸ். முறையில் ஏகப்பட்ட தவறுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.