இலங்கையில், குடும்பம் அல்லது சமூகக் காரணிகளால் மட்டுமல்லாது, தொழில்வழங்குனர்களாலும்  தொழிற்சந்தையில் பெண்களுக்கு சமமான அணுகல் மறுக்கப்படுகிறது. 

இலங்கையில் பெண் தொழிலாளர்களுக்கான கேள்வி:

பால்நிலை வேறுபாடுகள் மற்றும் தொழிற்சந்தை சவால்கள் என்ற தலைப்பில் ஐ.நா பெண்கள் அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையின் மையக்கரு இதுவாகும். 

இந்த அறிக்கையானது, பெண்கள் ஊதியம் பெறும் தொழிற்படையில் நுழைவதைத் தடுக்கும் தொழில் வழங்குனர்கள் மற்றும் நிறுவனங்களின் தரப்பில் அதிகம் ஆராயப்படாத காரணிகளை விளக்கும் நாட்டிலேயே முதலாவது அறிக்கையாகும்.

2019 இல், இலங்கையில் பணிபுரியும் வயதுடைய பெண்களில் 36% மட்டுமே ஊதியம் பெறும் பணியில் ஈடுபடுவதற்கு விருப்பத்துடனும் தயாராகவும் இருந்தனர். 

ஊதியம் பெறாத பராமரிப்பு பணிகள், திறன் பற்றாக்குறை மற்றும் பால்நிலை விழுமியங்கள் மற்றும் ஒரே மாதிரியான உள எண்ணங்கள் போன்ற சமூக-கலாச்சார காரணிகள், முறைசார் தொழிற்படையில் பெண்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் அடிப்படைக் காரணிகளாக வழங்கல் பகுதி பகுப்பாய்வுகள் மூலமாக அடையாளம் காணப்பட்டபோதிலும், இந்த அறிக்கை தொழில் வழங்குனர்களால் உருவாக்கப்படும் கேள்விப் பகுதி தடைகள் குறித்த நமது புரிதலில் குறிப்பிடத்தக்க இடைவெளியை சந்திக்கிறது.

உதாரணமாக, அறிக்கையிலிருந்தான புதிய பகுப்பாய்வு பின்வருவனவற்றைக் காட்டுகிறது:

  1. ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவது பகுதியளவில், குறைந்த திறன் கொண்ட பெண் தொழிலாளர்களுக்கான தொழில் வழங்குனர்களின் கேள்வியை பால்நிலை அடிப்படையிலான தொழிற் பிரிப்பு சக்தி வாய்ந்ததாக மாற்றுகிறது.
  2. பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரம் மற்றும் இரவு நேர வேலைகளை வழங்குவதில் இருந்து சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்ட தொழில்வழங்குனர்கள் மற்றும் மகப்பேற்று சலுகைகளுக்கு நிதியளிக்க முடியாதவர்கள், ஒப்பீட்டளவில் குறைவான பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
  3. பெண்கள் மேற்கொள்ளக்கூடிய மற்றும் மேற்கொள்ளமுடியாத பணிகள் தொடர்பான எண்ணங்களைக் கொண்டுள்ள தொழில்வழங்குனர்கள், குறைவான பெண்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
  4. நடுத்தர அளவிலான தொழில்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள், குறிப்பாக ஆங்கில மொழித் திறன் மற்றும் பிரச்சினைகளைக் கற்றுத் தீர்க்கும் திறன் ஆகிய திறன்களில் அதிகளவான பற்றாக்குறைகளைக் கொண்டுள்ளதாக உணரப்பட்டனர்.
  5. பதிலளித்த ஆண்களில் நான்கில் மூன்று பங்கினர் பெண் தொழிலாளர்களுக்கு எதிராக அறியாமலே பாரபட்சம் கொண்டவர்களென்பதுடன் பெண்களை பணிக்கு அமர்த்துவது குறைவாகும்.
  6. இயலாமைகளை உடைய பெண்களை பணிக்கு அமர்த்துவதற்கு தொழில்வழங்குனர்கள் தயாராக இருந்தாலும், அவர்களுக்கு அனுபவம் மற்றும் பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்புகள் பற்றாக்குறையால் தடைபட்டுள்ளனர்.

ஏனைய வளர்ந்து வரும் பொருளாதாரங்களைப் போலன்றி, இலங்கையில் ஏற்றுமதி நோக்குநிலையானது பெண் தொழிலாளர்களுக்கான அதிகரித்த கேள்வியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்பதுடன், இது சமீபத்திய காலங்களில் பொருளாதாரத்தின் பலவீனமான ஏற்றுமதி நோக்குநிலையை பிரதிபலிக்கிறது என்பதையும் கண்டறிவுகள் வெளிப்படுத்தின. 

தொழிலாளர் திறன்களை மறுசீரமைப்பதற்கு வணிக நடவடிக்கைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நிறுவனங்கள் பின்தங்கியிருப்பதாகத் தெரிகிறது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அமைப்புகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகலாலும் பெருந்தொற்றுக்களின் போது பணியாளர்கள் வீட்டிலிருந்து பணி செய்வதற்கான அனுபவமும் வளங்களும் பற்றாக்குறையாலும் கட்டுப்படுத்தப்பட்டபோது இது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. 

இந்த டிஜிட்டல் பிரிப்பு, அதிகரித்த பணி வாய்ப்புகளை வழங்குவதற்கு சாத்தியத்துடன் வரவிருக்கும் தொழிற்துறைகளில் பெண்களின் ஈடுபாட்டிற்கு பெரும் தடையாக உள்ளது.

இலங்கையில் ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி இந்த வெளியீட்டு நிகழ்வில் பேசுகையில், “பாரியளவில் பெண்களுக்கான மற்றும் பொருளாதாரத்திற்கான குறைந்த தொழிற்படை பங்கேற்பின் தாக்கங்கள் தீவிரமானவை. 

அதனால்தான் இந்தப் புதிய ஆராய்ச்சி அறிக்கை இன்றியமையாததுடன் இது நீண்ட காலப் பொருளாதாரக் கொள்கை வகுப்பில் பரிசீலிக்கப்பட வேண்டும். 

தொழிற்படையில் பெண்களின் முழுமையான ஈடுபாட்டை ஆதரிப்பதற்கு அரசாங்கம் மற்றும் தொழிற்துறை கொள்கைகள் முக்கியமானதாக இருக்கும் ஒரு வரைபடத்தை இது வழங்குகிறது’ என்று சுட்டிக்காட்டினார்.

ஐ.நா பெண்கள் அமைப்பின் இலங்கை நாட்டிற்கான பிரதிநிதியான  ரமாயா சல்கடோ குறிப்பிடுகையில்: 

“கௌரவமான வேலைக்கான சூழ்நிலையை உருவாக்குதலும் ஊழியர்களை பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பதும் அடிப்படை மனித உரிமைகளாகும். தற்போதுள்ள தொழிலாளர் சந்தைகளில் சமமாக பங்கேற்கும் பெண்களின் திறன் மற்றும் அனைத்து மட்டங்களிலும் பொருளாதார தீர்மானம் மேற்கொள்ளலில் அர்த்தமுள்ளதாக பங்குகொள்ளும் திறன் ஆகியவை பெண்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தை புரிந்துகொள்வதன் மையமாக உள்ளன. இந்த கற்கையில் [கீழே விவரிக்கப்பட்டுள்ள] குறிப்பிடப்பட்டுள்ள கொள்கை வழிகாட்டுதல்கள், ஊதியம் பெறும் பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதில் அரச, தனியார் துறை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

வெளியீட்டு நிகழ்வின் போது, இந்த கற்கை உத்தியோகபூர்வமாக கௌரவ. டாக்டர். சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் மற்றும் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவி மற்றும் குமாரி ஜெயசேகர, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோரின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து அரசு, சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பிரதான உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

2030 நிகழ்ச்சி நிரலின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய குமாரி ஜயசேகர, “இந்த விடயத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த அணுகுமுறையில் பணியாற்ற நாங்கள் வரவேற்கிறோம். 

பெண் தொழிலாளர்களுக்கான கேள்வியை அதிகரிப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல், கொள்கை உரையாடலில் ஈடுபடல் மற்றும் உருவாக்கம், தந்திரோபாய நடவடிக்கைகளின் வடிவமைத்தல் மற்றும் இந்த நடவடிக்கைகளின் அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய செயன்முறைகளில் ஈடுபடுகின்ற அரச, தனியார் துறை மற்றும் அரச சார்பற்ற துறைகளின் செறிவான, ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது" என்று சுட்டிக்காட்டினார்.

பாகுபாடு அல்லது பாரபட்சம் இன்றி ஊதியத்திற்காக பணிபுரியும் தெரிவை பெண்கள் கொண்டிருப்பதனை உறுதி செய்வதற்கு, இலங்கையின் முறைசார் நிறுவனங்களில் சிறந்த கொள்கை, செயற்பாடு மற்றும் முதலீடு ஆகியவற்றிற்காக ஐ.நா பெண்கள் அமைப்பு அழைப்பு விடுக்கின்றது. 

இது குறிப்பாக இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு உதவும் வகையில், உற்பத்திக் கட்டமைப்புகளை பல்வகைப்படுத்தவும் மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பேரினப் பொருளாதார, கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கொள்கைகளை உருவாக்குதலை உள்ளடக்குகின்றது. 

மேலும், தற்போது நிலவும் பெருந்தொற்றின் தாக்கத்தில், உற்பத்தி செயன்முறைகளை மேம்படுத்த உதவும் டிஜிட்டல் மயமாக்கல், தன்னியக்கம் மற்றும் வீட்டிலிருந்து பணி செய்யும் ஏற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

பெண்களுக்கு நடுத்தர அளவிலான தொழிற் திறன்களில், குறிப்பாக ஆங்கில மொழித் திறன்களில் பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தையும் கொள்கைப் பரிந்துரைகள் சுட்டிக்காட்டுகின்றன. 

இயலாமைகளை உடைய பெண்களை பணிக்கு அமர்த்துவதில் தொழில்வழங்குனருக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆதரவான நடவடிக்கைககளும் தேவைப்படுகின்றன. சிறிய மற்றும் நடுத்தரளவிலான நிறுவனங்கள் (SME)  பெண் தொழிலாளர்களுக்கான அதிக கேள்வியை உருவாக்குபவை என்பதால் சிறிய மற்றும் நடுத்தரளவிலான நிறுவனங்கள் (SMEs), பெண்களின் தொழில்முயற்சியாண்மை, உரிமை மற்றும் முகாமைத்துவத்தை ஊக்குவிப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இறுதியாக, பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரம் மற்றும் இரவு நேர வேலைகளை வசதிப்படுத்துவதற்காக தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன் மகப்பேறு நலன்களுக்காக ஒரு சமூக நிதியை அமைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. 

திருமணத்திற்குப் பிறகும் பெண் பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் குடும்ப-நட்புறவான பணியிடக் கொள்கைகளை ஊக்குவிப்பது, ஊதியம் பெறும் தொழிற்படையில் அதிகமான பெண்கள் நுழைவதை உறுதி செய்யும்.

முழு அறிக்கை இங்கே கிடைக்கிறது

ஐ.நா பெண்கள் அமைப்பு தொடர்பில்:

ஐ.நா பெண்கள் அமைப்பு என்பது பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஐ.நா அமைப்பாகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உலகளாவிய வெற்றியாளரான, ஐ.நா. பெண்கள் அமைப்பு உலகளவில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னேற்றத்தை விரைவுபடுத்த நிறுவப்பட்டது. 

மேலும் அறிவதற்கு: asiapacific.unwomen.org