( எம்.எப்.எம்.பஸீர்)
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில், தான் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெள்ளிக்கிழமை ( 25) உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
இது தொடர்பிலான வழக்கு, உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அளுவிஹார தலைமையிலான எல்.ரி.பி. தெஹிதெனிய மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போதே ரஞ்சன் ராமநாயக்க தன் மீதான குற்றச்சாட்டினை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றுக்கு அறிவித்தார்.
குறித்த வழக்கு தொடர்பில் வெள்ளிக்கிழமை (25) சிறைச்சாலை அதிகாரிகளால் ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த 2 ஆவது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் தான் நிரபராதி என ஏற்கனவே குற்றச்சாட்டு கையளிக்கப்பட்ட போது ரஞ்சன் ராமநாயக்க அறிவித்திருந்தார்.
எனினும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரஞ்சன் ராமநாயக்கவுக்காக மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, இவ்வழக்கில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு தனது சேவை பெறுநர் ஏற்கனவே நிரபராதி என தன் நிலைப்பாட்டை அறிவித்திருந்த நிலையில், அதனை மாற்றி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் குற்றவாளி என நிலைப்பாட்டினை முன் வைக்க அனுமதியளிக்குமாறு கோரினார்.
இதனையடுத்து, நீதியரசர்கள் குழாம், குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை திறந்த நீதிமன்றில் அழைத்து அவரது சட்டத்தரணி முன் வைத்த விடயம் தொடர்பில் வினவியது.
அதற்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க, இதற்கு முன்னர் தான் நிரபராதி என தன் நிலைப்பாட்டை மன்றுக்கு அறிவித்திருந்த போதும் அதனை வாபஸ் பெற்று முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு தான் குற்றவாளி என ஒப்புக்கொள்வதாக சிங்கள மொழியில் தெரிவித்தார்.
இதனையடுத்து மன்றில் விஷேட கோரிக்கையினை முன் வைத்த ரஞ்சனின் சட்டத்தரணி அனுர மெத்தேகொட, இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன் வைக்க கால அவகாசம் கோரினார்.
இதனையடுத்து சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் , இவ்வாறனதொரு நிலைமையில் பிரதிவாதிக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது அவ்விரண்டினையும் விதிக்க முடியும் எனவும், பொருத்தமான தீர்ப்பொன்றினை வழங்குமாறு தான் மன்றினை கோருவதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து இந்த இவ்ழக்கில் எழுத்து மூல சமர்ப்பணங்கள் இருப்பின் மே 4 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதியரசர்கள், வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாது ஒத்தி வைத்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் குழாம் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கருத்துக்களை மையப்படுத்தி அப்போதைய உயர் நீதிமன்ற பதிவாளரால் , ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றை அவமதித்தமை தொடர்பிலான இந்த 2 ஆவது முறைப்பாட்டினை செய்திருந்தார்.
இதற்கு முன்னர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பிலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 3 மாதங்கள் அவை நடவடிக்கையில் பங்குபற்றாமை காரணமாக அவர் பாராளுமன்ற உறுப்புரிமையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM