(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் பொருளாதாரம் தற்போது தீர்மானமிக்க நிலையில் உள்ளது. எதிர்வரும் இரண்டுமாத காலத்தினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் தீர்மானம் நாட்டுக்கு செல்வாக்கு மிக்கதாக அமையும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது கொள்கைக்கமைய செயற்பட வேண்டும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் பொருளாதாரம் பாரதூரமான நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம்.கொவிட் தாக்கத்தின் முன்னரான காலப்பகுதியில் செயற்படுத்திய தவறான பொருளாதார கொள்கை கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் தீவிரமடைந்தால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 வீதத்திலிருந்து 2 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. அக்காலப்பகுதியில் அரசமுறை கடன் 15 பில்லியன்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி 182 ரூபா வரை வீழ்ச்சியடைந்திருந்தது.

இவ்வாறான பொருளாதார பாதிப்பு நிலைமை கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் தீவிரமடைந்ததால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினை கருத்திற்கொண்டு பல்வேறு தரப்பினர் நாட்டை முடக்குமாறு பலமுறை பல்வேறு முறைகளில் அழுத்தம் பிரயோகித்ததால் சுமார் 1,000 பில்லியன் அரச வருவாயினை இழக்க நேரிட்டது.

கொவிட் தாக்கத்தினால் சுற்றுலாத்துறையின் ஊடாக வருடாந்தம் கிடைக்கப்பெறும் 9.5 பில்லியன் வருவாயினையும் இழக்க நேரிட்டுள்ளது.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவை துறையிலும், இதர துறைகளிலும் ஏற்பட்டுள்ள கட்டணம் அதிகரித்துள்ளத. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதால் எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் நிலைமை தோற்றம் பெற்றது அதன் காரணமாக மின்விநியோக கட்டமைப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெருக்கடியான சூழ்நிலையிலும் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்களுக்காக மத்திய வங்கி கடந்த ஆண்டு 1800 பில்லியனை செலவிட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வணிக கடன் வீதம் அதிகரிப்பு, மொத்த தேசிய உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட விடயங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. கொவிட் தாக்கத்தின் காரணமாக 2020ஆம் ஆண்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு கடந்த இரண்டு வருட காலத்தில் பலமுறை நாட்டை முடக்கியதால் சுற்றுலாத்துறை ஊடாக 9 பில்லியன் டொலரையும், அந்நிய செலாவணி ஊடான 1.5 பில்லியன் டொலரையும் இழக்க நேரிட்டது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது இலகு ஆனால் அதன் பின்னர் தோற்றம் பெறும் பொருளாதார பாதிப்பு எந்தளவிற்கு பாரதூரமானதாக அமையும் என்பதற்கு தற்போதைய நிலைமை சிறந்த எடுத்துக்காட்டு. எதிர்வரும் காலங்களில் ஊரடங்கு பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.

2015 தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட தவறான தீர்மானங்களினால் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் நிற்பதும்,அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் கவலைக்குரியது. பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரசமுறை கடன்களை உரிய காலத்தில் மீள் செலுத்தாவிடின் அது பிறிதொரு வகையில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

கொவிட் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய வங்கி ஊடாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வட்டி வீதம் குறைக்கபபட்டதால் 200 மில்லியன் அளவில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு வட்டி வீதத்தில் தளர்வான கொள்கை பேணப்பட்டுள்ளது. பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் பல மாற்றுத்திட்டங்களையும் செயற்படுத்தியுள்ளது.மேலும் சிறந்த கொள்கைகளை மத்திய வங்கி பரிசீலனை செய்கிறது.

பொருளாதார நெருக்கடியினை முகாமைத்துவம் செய்ய மத்திய வங்கி 6மாத கால பொருளாதார மீட்சி கொள்கையினை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசாங்கததிடம் முன்வைத்தது.

அத்தியாவசியமற்ற பொருள் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்தல், எரிபொருள், மின்சார கட்டணத்தை அதிகரித்தல், புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை ஊக்குவித்தல், பாரிய அபிவிருத்தி கொள்கை திட்டங்களை தற்காலிகமாக அதாவது ஒருவருட காலத்திற்கு இடைநிறுத்தல் உள்ளிட்ட 8 யோசனைகளை முன்வைத்துள்ளது.

தற்போது அத்தியாவசியமற்ற பொருள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதுடன் எரிபொளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மிகுதி யோசனைகளை செயற்படுத்துமாறு வலியுறுத்துகிறோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியததை நாடுமாறு பல தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் சாதக பாதக காரணிகளை ஆராய்ந்து அதனுடன் இணக்கமாக செயற்பட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் இலங்கையின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வகையில் அமைய கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இலங்கையின் பொருளாதார நிலைமை தீர்மானமிக்க நிலையில் தற்போது உள்ளது. எதிர்வரும் 2 மாத கால பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தும்.

தற்போதைய நெருக்கடியான நிலைமையில் அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்படுவது அவசியமாகும் என்றார்.