இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை  சந்திக்கவுள்ளார்.

இன்று மாலை 5 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளனர். உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் குறித்து மு.கா.வின் தலைமை அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக அக்கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸும் அதிருப்தி வெளியிட்டிருக்கின்றார். 

அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டும் மத்திய அரசாங்கத்தின் தலையீடுகளால் சிறுபான்மை பிரதிநிதித்துவங்களால் மக்கள் சேவையை முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றார். 

இவ்வாறான நிலையில் இலங்கையின் தேசிய சிறுபான்மை இனமாக இருக்கும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கும் கட்சிகளில் ஒன்றான மு.கா.வுடனான சந்திப்பு  பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாளையும் முக்கிய சந்திப்புக்கள்

இதேவேளை நாளை புதன்கிழமை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள்  மற்றும்  வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்களையும்  பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும்  முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றுடனும் ஐ.நா. நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா விசேட சந்திப்புக்களை நடத்தி கலந்துரையாடவுள்ளார். 

குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதோடு  இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர். 

இலங்கையில் தமிழினம் சிறுபான்மையாக காணப்படுகின்ற நிலையில் நீண்டகாலமாக இன, மத ரீதியான இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இந்நிலையில் தமிழினமும் தேசிய இனமாக கருதப்பட்டு சம அந்தஸ்து அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பாக காணப்படுகின்ற தமிழினத்திற்கு நீதி, நியாயம், வழங்கப்படவேண்டும் என்பதையும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டவுள்ளது. அத்துடன்  உடனடிப்பிரச்சினைகள் தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும், நீண்டகால பிரச்சினைகளை புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதன்போது வலியுறுத்தவுள்ளது.

அதனைத் தொடர்ந்து  ஐ.நா. நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியா தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சில்   தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையிலான குழுவினரைச் சந்திக்கவுள்ளார். 

இச்சந்திப்பின்போது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் மற்றும் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார சிக்கல்கள் தொடர்பான அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் எழுத்து மூலமான அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதோடு ஐ.நா.சபை தொடர்ந்தும் இலங்கை வாழ் தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்களுக்கு உறுதுணையாக நிற்கவேண்டிய விடயங்கள் குறித்தும் எடுத்துரைக்கவுள்ளதாக தெரிவித்தார். 

தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் ஐ.நா. நிபுணருக்கும்  இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை அரசியலில் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பில் முஸ்லிம்களுக்கு பலத்த சந்தேகமும், அச்சமும் ஏற்பட்டுள்ளமை குறித்து, சுட்டிக்காட்டப்படவுள்ளதோடு இந்த மாற்றங்களினால் முஸ்லிம்களுக்கு அநீதி நடக்க சர்வதேசம் தொடர்ந்தும் துணையாக இருக்கக் கூடாது என்ற  நிலைப்பாடும் வலியுறுத்தப்படவுள்ளது.