குப்பைக்கு சமமான எதிர்க்கட்சியில் நாம் ஒருபோதுமே இணைய மாட்டோம் - அமைச்சர் வாசு

23 Mar, 2022 | 04:41 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாம் இப்போதும் அரசில்தான் இருக்கின்றோம். தேவைப்படும் போது சுயாதீனமாக நினைத்தாலும் அரசாங்கத்திற்குள் சுயாதீனமாக இருப்போம், குப்பைக்கு சமமான எதிர்க்கட்சியில் ஒருபோதுமே இணைய மாட்டோம் என அரச  பங்காளிக் கட்சித்தலைவரும் அமைச்சருமான  வாசுதேவ நாணயக்கார  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை 23 ஆம் திகதி காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில்  ஒழுங்கு விதிகளை காணிகள் அமைச்சர் சந்திரசேன சமர்ப்பித்து உரையாற்றிய போது அவரிடம் பல குறுக்கீட்டுக்கேள்விகளை எழுப்பிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தொடர்ந்து காணிகள் அமைச்சரை திக்குமுக்காட வைத்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் தனது உரையிலும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார காணிகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தார். 

இதன்போது எதிர்க்கட்சியினர் அரசின் ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான அண்மையில் அமைச்சுப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்பன்பில தொடர்பில் கேள்விகளை எழுப்பியதுடன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவையும் எதிர்க்கட்சிப் பக்கத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இதன்போதே ஆவேசமடைந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, விமல்  , உதய ஆகியோர் நிலைப்பாடு தொடர்பில் நீங்கள் அவர்களிடமே கேட்க வேண்டும். 

நான் இப்போதும் அரசில்தான் இருக்கின்றேன்,அரசிலிருந்தவாறு சுயாதீனமாக  செயற்பட விரும்பினால் அரசுக்கு அறிவித்து விட்டு அவ்வாறு செயற்படுவோம். 

அதனை விடுத்து குப்பைக்கு சமமான எதிர்க்கட்சியில் ஒருபோதுமே இணைய மாட்டேன். 

நீங்களும் ஒருபோதுமே ஆட்சிக்கு வர முடியாது, உங்களது வரலாறுகளை பார்த்தாலே மக்களுக்கும் உங்களின் நிலைமை நன்றாக விளங்கும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right