(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாத தடை சட்ட திருத்தம் என்ற தவறான ஒரு முயற்சியை ஆரம்பித்து அதுவே நல்ல நகர்வு எனவும் உலகத்தை ஏமாற்ற நினைக்கின்றீர்கள்.

இதில் மறுசீரமைப்பு என்ற சொல்லுக்கான அர்த்தத்தையே மாற்றியுள்ளீர்கள். ஆகவே இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக நாம் எதிர்க்கின்றோம் எனவும் சகல இன மக்களையும் சந்தித்து பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்ற தெளிவுபடுத்தலை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

Articles Tagged Under: தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் | Virakesari.lk

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்  செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடை சட்டமானது தற்காலிக ஏற்பாடுகள் என கூறப்பட்ட போதிலும் 43 ஆண்டுகளாக இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

எனவே ஆறுமாத கால தற்காலிக ஏற்பாடுகள் என்பது ஒரு நகைப்பிற்குரிய விடயமாக மாறியுள்ளது. அதேபோல் இது அரசியல் ரீதியான சட்டம் என ரணில் விக்ரமசிங்க கூறினார். ஆனால் இது அரசியல் ரீதியானது அல்ல. அரசியல் அமைப்புக்கு முரணாகவே இது கொண்டுவரப்பட்டது. 

அவசர சட்டமூலமாக கொண்டுவந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்  இதனை நிறைவேற்றினர். இதற்கு நீதிமன்றத்தின் ஆணை வழங்க முன்னரே சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டனர்.

அரசியல் அமைப்பிற்கு முரணாக கொண்டுவந்த ஒரு சட்டத்தை அடுத்துவந்த அரசாங்கங்கள் கருத்தில் கொள்ளாது நடைமுறைப்படுத்தினர்.

பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்ட முதலாம் நாளில் இருந்தே துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. பிழையான சடமாகவே இது இயங்க ஆரம்பித்தது.

பயங்கரவாதத்தை இது தடுக்கவில்லை, மாறாக தவறாகவே பயன்படுத்தப்பட்டது. இது குறித்து பல சாட்சியங்கள் உள்ளன. நானும் சில வழக்குகளில் ஆஜராகியுள்ளேன்.

குறிப்பாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இதில் அச்சுறுத்தலான விடயமாக உள்ளது. வற்புறுத்தப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுகின்றன. இப்போதும் இதே நிலைமையே காணப்படுகின்றது. இவற்றில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் முயட்சிகவில்லை.

தடுப்புக்காவல் காலத்தை 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைத்ததாக கூறுகின்றீர்கள், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 18 மாதங்களுக்கு பின்னர் குறித்த நபர் விடுவிக்கப்படுவது நியாயமானதா? அல்லது 12 மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பது நியாயமானதா? பிணை வழங்கப்படும் என்றாலும் கூட மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கினாலும் மேல் நீதிமன்றம் அதனை நிராகரித்து விசாரணைகளை முடிவும் வரையில் நபரை தடுத்து வைக்க முடியும்.

எனவே, நாம் நாடு முழுவதும் சென்று ஒரு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். சகல இன மக்களையும் சந்தித்து பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்  என்ற தெளிவுபடுத்தலை முன்னெடுத்து வருகின்றோம். இந்த சட்டத்தின் கீழ் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜே.வி.பியினர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இப்போது முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சகல மக்களும் இதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சட்டங்களை வைத்து தவறாக வழிநடத்திக்கொண்டுள்ளீர்கள். இந்த முயற்சி வெற்றியளிக்காது ஆனாலும் அதனையே நீங்கள் செய்துகொண்டுள்ளீர்கள்.

தவறான ஒரு முயற்சியை ஆரம்பித்து அதுவே நல்ல நகர்வு எனவும் அதற்கான ஆரம்பத்தை கையாண்டுள்ளோம் எனவும் இதனை தொடர்வோம் எனவும் கூறிக்கொண்டுள்ளீர்கள். அதேபோல் உலகத்தை ஏமாற்ற நினைக்கின்றீர்கள். இதில் மறுசீரமைப்பு என்ற சொல்லுக்கான அர்த்தத்தையே மாற்றியுள்ளீர்கள். ஆகவே இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக நாம் எதிர்க்கின்றோம் என்றார்.