இன்றைய இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தங்களது கைப்பேசியில் யாரேனும் தொடர்பு கொள்ளும் போதோ அல்லது இவர்களை யாரேனும் தொடர்பு கொள்ளும் போதும் இசை ஒலிக்கும். 

அடிக்கடி மாற்றத்திற்குள்ளாகும் இந்த ஒலியில் அண்மைக்காலமாக சிலம்பரசனின் நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘மாநாடு’ படத்தில் இடம் பெற்ற பின்னணி இசை இடம்பெற்றிருக்கிறது. 

நல்லதொரு ஜீவனுள்ள இந்த நாத லய ஒலிக்குறித்து இணையத்தில் கூடுதல் தகவலைத் தேடியபோது இதனை வாசித்தவர் புல்லாங்குழல் இசைக்கலைஞர் விஜய் என தெரியவந்தது.  

இந்நிலையில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கும் இத்தகைய புல்லாங்குழல் இசையை வாசித்த இசைக் கலைஞர் கே ஜே விஜய் அவர்களை சங்கமத்திற்காக சந்தித்தோம்.

உங்களைப் பற்றி..?

எம்முடைய அப்பப்பாவும், ‘புல்லாங்குழல் இசை மேதை’ டி ஆர் மாலி அவர்களின் சீடருமான எல். சுந்தரம் அவர்களிடம் ஆறு வயதாக இருக்கும்போதே அவரது மடியில் அமர்ந்து புல்லாங்குழல் இசைக்கக் கற்றுக் கொண்டேன். 

எம்முடைய தந்தைஜோதி அவர்களும் புல்லாங்குழல் இசைக்கலைஞர் தான். எம்முடைய உறவினர்களான ரகு மற்றும் ரவி ஆகிய இருவரும் புல்லாங்குழல் இசை கலைஞர்கள் தான். 

இப்படி குடும்பம் முழுவதும் இசை பின்னணி கொண்டதால் இயல்பிலேயே இசையை கற்கும் ஆர்வம் பிறந்து, புல்லாங்குழலை கற்றேன். கர்நாடக இசை பாணியில் கற்றுக் கொண்டாலும், எம்முடைய ஆர்வமும், கவனமும் திரையிசை மீதே இருந்தது. அதன் காரணமாக முன்னணி இசைக் கலைஞர்களின் மேடை கச்சேரிகளில் பங்குபற்றி புல்லாங்குழலை வாசித்தேன். மறைந்த ‘பாடும் நிலா’ எஸ் பி பாலசுப்ரமணியம், ஸ்ரீநிவாஸ், ஹரிஹரன், எஸ் ஜானகி உள்ளிட்ட ஏராளமான திரைப்பட பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகளின் நேரலை இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி புல்லாங்குழல் வாசித்திருக்கிறேன். மறைந்த ‘இசை சித்தர்’ டி எம் சௌந்தரராஜன் அவர்களுடன் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணித்து அவருடைய இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி புல்லாங்குழல் வாசித்திருக்கிறேன்.

கர்நாடக இசைத்துறையில் பணியாற்றாமல் திரையிசையை தெரிவு செய்து பயணிப்பதன் பின்னணி..?

எம்மைப் பொருத்தவரை இசை என்பது ஒன்றுதான். அதனை கர்நாடக இசை, திரையிசை என பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என கருதுகிறேன். 

வாசிக்கும் மேடை, வாசிப்பு பாணி ஆகியவற்றில் வித்தியாசம் இருக்கலாமே தவிர, வாசிப்பு அனுபவம் என்பதும், வழங்கப்பட்ட இசைக்குறிப்புகளை வாசிப்பது என்பதும் ஒன்றுதான் என கருதுகிறேன். கிளாசிக்கல் மியூசிக் எனப்படும் கர்நாடக இசையை கற்றுக்கொண்டால்.., அனைத்து வித இசை வடிவங்களிலும் எளிதாக பணியாற்ற இயலும்.

திரையிசைத் துறையில் உங்களுடைய பங்களிப்பு..?

திரைப்பட பின்னணி பாடகர்கள் இசை நிகழ்ச்சிகளில் வாசித்ததால் இசையமைப்பாளர்களின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. 

இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா... என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் பணியாற்றிய திரைப்படங்களிலும், பாடல்களிலும் புல்லாங்குழல் வாசித்திருக்கிறேன். 'தர்மதுரை', 'பா. பாண்டி', 'சண்டக்கோழி 2', 'இரும்புத்திரை', 'கண்ணே கலைமானே', 'மெஹந்தி சர்க்கஸ்', 'ராட்சசி', 'சுல்தான்', 'மாநாடு', 'ஜெய் பீம்', 'வலிமை' என பல திரைப்படங்களுக்கு பாடல்களிலும், பின்னணி இசையிலும் வாசித்திருக்கிறேன்.

உங்களுடைய அனுபவத்தை அவதானிக்கையில், நீங்களும் விரைவில் திரைப்பட இசையமைப்பாளராக வருவீர்கள் எனக் கருதலாமா..?

ஒவ்வொரு இசைக்கலைஞர்களுக்குள்ளும் ஒரு இசை அமைப்பாளர்கள் உள்ளீடாக பொதிந்து இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க இயலாத உண்மை. 

இசையமைப்பாளர்கள் வழங்கும் இசை குறிப்பை பதிவரங்கத்தில் வாசிக்கும்போது, அவர்கள் சில இடங்களில் உங்களுடைய கற்பனை சக்தியுடன் இணைத்து வாசிக்கலாம் என அனுமதி அளிப்பர். 

அத்தகைய தருணங்களில் எம்மை போன்ற இசைக் கலைஞர்கள் தங்களுடைய தனித்துவமான திறமையையும் சேர்த்து வெளிப்படுத்துவர். 

இது போன்ற நுட்பமான தருணங்களை, துல்லியமாக அவதானித்து அதன்மீது ஒருமுகமான பயிற்சியை தொடர்ந்தால், இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளலாம்.

கர்நாடக இசை மேடைகளாக இருந்தாலும்.. மெல்லிசை மேடை நிகழ்ச்சிகளாக இருந்தாலும்.. வாய்ப்பாட்டு கலைஞர்களுக்கும் கிடைக்கும் அங்கீகாரமும், அடையாளமும், இசைக்கருவியை வாசிக்கும் இசைக் கலைஞர்களுக்கும் கிடைக்கிறதா..?

நிச்சயமாக கிடைக்கிறது. இன்றைய திகதியில் உலகம் முழுவதும் ஹரிபிரசாத் சௌராசியா என்ற புல்லாங்குழல் இசை மேதையை தெரியாதவர்களே இல்லை எனலாம்.

திரையிசைப் பாடலாக இருந்தாலும் அல்லது பக்தி இசை, தனி இசை பாடல்களாக இருந்தாலும், ஒரு பாடல் வெற்றி பெற்றால், அதனைக் கேட்கும் ரசிகர்கள் பாடலைப் பற்றிய விவரங்களை இணையத்தில் தேடி, அந்தப் பாடலில் பங்களித்த இசைக்கலைஞர்களை பற்றி அறிந்து, அவர்களை பாராட்டுகிறார்கள். 

அதே தருணத்தில் இசைக்கருவி வாசிக்கும் கலைஞர்களை விட, வாய்ப்பாட்டு கலைஞர்களுக்கு ஒரு காலகட்டத்தில் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துவந்தது உண்மைதான்.

ஆனால் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் வருகைக்குப் பிறகு இதில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அவர் ஒவ்வொரு இசை அல்பங்களிலும் இசைக்கலைஞர்களை பற்றிய விவரங்களை பதிவிட்டார்.

மறைந்த ‘பாடும் நிலா’ எஸ் பி பாலசுப்ரமணியம் ஒரு இசை நிகழ்ச்சியின் இடையே பார்வையாளர்களிடம் பேசுகையில், '' எமக்குப் பின்னால் வாசித்துக் கொண்டிருக்கும் இசைக்கலைஞர்கள் இல்லையென்றால், எங்களுக்கான புகழ் இல்லை.

நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே, இவர்கள் மேடைக்கு வருகை தந்து இசைக்கருவிகளின் சுருதியை பரிசோதித்து தயாரான நிலையில் வைத்திருப்பர்.

அதேபோல் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் கூடுதலாக சில மணி நேரம் மேடையிலிருந்து, ஒவ்வொரு இசைக் கருவியையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு,பிறகு தாமதமாகத்தான் செல்வார்கள்.'' என குறிப்பிட்டிருக்கிறார்.

மறக்க முடியாத அனுபவம் என்ன..?

மறைந்த இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன், வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா போன்ற இசைக்கலைஞர்களைப் போல், ரசிகர்களுக்கு பிடித்த பிரபலமான பாடல்களை புல்லாங்குழலில் இசைத்து, அதனை எம்முடைய இணையப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறேன்.

இதில் 'சின்னக்கண்ணன் அழைக்கிறான் ..' என்ற பாடலுக்கு, எம்முடைய வாசிப்பைக் கேட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாராட்டுவதும், பாராட்டிக் கொண்டிருப்பது மறக்க இயலாத அனுபவமாக இருக்கிறது.

திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் தென் பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும்போது, அங்குள்ள மக்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களை விரும்பிக் கேட்பதும், அதனை வாசிப்பதும் மறக்க இயலாதது.

வாசிப்பதற்கு கடினமான இசைக்கருவி என்ற பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் புல்லாங்குழலை நீங்கள் தெரிவு செய்ததன் பின்னணி என்ன?

ஆண்டவனின் கருணை என்று இதனை குறிப்பிடவேண்டும். மேலும் பாரம்பரியமாக புல்லாங்குழல் வாசிப்பதால் இதை எளிதாக கைவரப்பெற்றிருக்கலாம்.

அத்துடன் புல்லாங்குழல் என்ற கருவி மீது நான் காற்றால் ஊதுகிறேன். அது இசையாக பார்வையாளர்களிடத்தில் பரிமாற்றம் நடைபெறுகிறது.

இது இறைவனின் கொடை தானே..!  ஆனால் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மருத்துவத் துறையினர், உங்களின் நுரையீரலின் ஆரோக்கியத்திற்காக புல்லாங்குழல் போன்ற காற்று இசைக்கருவியை கற்றுக்கொள்வது நல்லது என பரிந்துரைத்திருக்கிறார்கள்.

எதிர்காலத் திட்டம் என்ன?

புல்லாங்குழல் இசையை ஏராளமான மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. தனி இசை அல்பங்களாக வெளியிடும் எண்ணமும் இருக்கிறது.

இதுதொடர்பாக முன்னணி இசை நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. தொடர்ந்து இதே துறையில் பயணித்து சாதனை படைக்க வேண்டும் என்பதே நிரந்தர இலக்கு.

வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் விடயம் என்ன..?

உங்களுடைய பிள்ளைகளுக்கு மதிப்பெண் மட்டுமே இறுதி இலக்காக நிர்ணயிக்காதீர்கள். அவர்களுக்கு இசை மீது ஆர்வம் இருந்தால், அதனை அவதானித்து வளர்த்தெடுக்க வேண்டும். அதற்குரிய பங்களிப்பை விசாலமான எண்ணத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு கல்வி ஒரு கண் என்றால், இசை போன்ற கலை என்பது மற்றொரு கண் போன்றது.

(சந்திப்பு: கும்பகோணத்தான்)