(லியோ நிரோஷ தர்ஷன்)

நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பௌத்த மதத்திற்கு எதிராக சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இது வரையில் 48 பிக்குகள் கைது பல்வேறு விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹர பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற நிழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர்அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தனது ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட மத ரீதியான சுதந்திரம் மற்றும்  புத்துணர்ச்சி என்பன தற்போது குறைந்து வருகின்றது. பிக்குவாதத்திற்கு சிறுவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்கள் கூட இன்று பொலிஸ் விசாரணைக்கு செல்ல வேண்டிய நிலையே காணப்படுகின்றது. பௌத்த மதத்திற்கு எதிரான செயற்பாடுகளும் சூழ்ச்சிகளும் நல்லாட்சியில் காணப்படுகின்றது. 

நல்லிணக்கத்தை ஒரு பக்க சார்பாக கட்டியெழுப்ப முடியாது. நல்லிணக்கம் என்ற பேரில் பிரதான இனம் ஓரங்கட்டப்படுவதோ அல்லது உள ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்வதோ நல்லிணக்கத்திற்கு சாதகமான அமையாது. ஆகவே அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய விதத்தில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். 

ஆனால் இன்று மிகவும் மோசமான முறையில் பௌத்த மதத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கம் பதவி ஏற்ற தினத்தில் இருந்து இது வரைக்காலமும் 48 பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.