ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷால் இன்று  செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் திட்டமிட்டுத் தீவிரமாகத் தொடர்ந்து கொண்டும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் சிந்தனை அறவேயின்றியும் நாட்டைப் பொருளாதார ரீதியாக அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்றும் மக்களையும் சர்வதேசத்தையும் எதிர்கொள்ள முடியாது.

சிக்கித் திணறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் தான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் திசை திருப்புவதற்காகவும் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் நாளைய தினம் நடாத்தும் அரசியல் நாடகமான சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதியை  காப்பாற்றவோ அவருக்கு உயிர் கொடுக்கவோ விரும்பாத காரணத்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்து சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பது என்ற முடிவை இனம் சார்ந்து எடுத்துள்ளது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.