(எம்.மனோசித்ரா)

மேல்மாகாண அரச பாடசாலைகளில் 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள்கள் அச்சிடுவதற்கான கடதாசி தட்டுப்பாடு காரணமாக ஒத்திவைக்கப்படவிருந்த தவணை பரீட்சைகள் முன்னரே திட்டமிடப்பட்ட திகதிகளில் நடைபெறும் என்று மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் , பரீட்சை வினாத்தாள்கள் உள்ளிட்ட கல்வி செயற்பாடுகளுக்கு தேவையான கடதாசிகள் மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் , இந்திய கடன் திட்டத்தின் கீழ் இவ்வாறு கடதாசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையால் பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படாது என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். 

அதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரமின்றி ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பரீட்சைகளை முன்னரே திட்டமிட்டபடி நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தவணை பரீட்சைகளை நடாத்தும் திகதிகளில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த 18 ஆம் திகதி மேல் மாகாண கல்வி திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் மேல் மாகாண கல்வி பணிப்பாளரால் ஏனைய அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் காணப்படுமாயின் அது தொடர்பில் அறிவிக்குமாறு சுட்டிக்காட்டி இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.  

அதற்கமைய 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கான இறுதி தவணை பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கமைய 4,9,10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்கான ஆண்டிறுதி பரீட்சையை ஏப்ரல் விடுமுறையின் பின்னர் நடாத்துவதற்கு மேல் மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்த போதிலும் , கடதாசி தொகை இறக்குமதி செய்யப்பட்டமையால் இந்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.