இலங்­கையில் தெற்­கிலும் வடக்­கிலும் மக்­களை அணி திரட்டும் இரு வெவ்­வேறு அர­சியல் செயற்­பா­டுகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இரு அணித்­தி­ரட்­டல்­க­ளுமே முற்­றிலும் முரண்­பட்ட நோக்­கங்­களைத் கொண்­டி­ருக்­கின்ற அதே­வேளை, ஒன்றை மற்­றை­யது பரஸ்­பரம் வச­திப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைந்­தி­ருக்­கி­றது. அத்­துடன் இந்த எதிர்­மு­னைப்­பட்ட  இரு செயற்­பா­டு­க­ளுமே இறு­தியில் புதிய அர­சியல் கட்­சி­களை அல்­லது புதிய அர­சியல் அணி­களைத் தோற்­று­விக்­கக்­கூ­டிய வாய்ப்­புக்­களைக் கொண்­டி­ருக்­கின்­றன என்றும் கூறலாம்.

தென்­னி­லங்­கையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் அவ­ருக்கு ஆத­ர­வான அர­சியல் சக்­தி­களும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் தலை­மை­யி­லான தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்­துக்கு எதி­ராக மக்­களை அணி­தி­ரட்டி மீண்டும் ஆட்­சி­ய­தி­கா­ரத்தை கைப்­பற்றும் நோக்­குடன் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற அதே­வேளை, மறு­பு­றத்தில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் அவரை இணைத்­த­லை­வ­ராகக் கொண்ட சிவில் சமூக அமைப்பு என்று சொல்­லப்­ப­டு­கின்ற தமிழ் மக்கள் பேர­வைக்கு அனு­ச­ர­ணை­யான தமிழ் அர­சியல் சக்­தி­களும் தமிழ் மக்­களை அழுத்­து­கின்ற பிரச்­சி­னைகள் தொடர்­பி­லான கரி­ச­னை­க­ளையும் கவ­லை­க­ளையும் கண்­ட­னங்­க­ளையும் வெளிப்­ப­டுத்தி விழிப்­பு­ணர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மக்­களை அணி­தி­ரட்ட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர். இந்த அணி திரட்டல் தமிழ் பேசும் மக்­களின் நியா­ய­பூர்­வ­மான நீண்­ட­கால அர­சியல் அபி­லா­சை­களை நிறைவு செய்­யக்­கூ­டிய அர­சியல் இணக்கத் தீர்­வொன்றைக் காண வேண்­டிய அவ­சி­யத்தை முன்­னி­றுத்தி மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற அதே­வேளை, தென்­னி­லங்­கையில் ராஜபக் ஷ முகாமின் அணி­தி­ரட்டல் அடிப்­ப­டையில் சிறு­பான்மை இனத்­த­வர்­களின் நியா­ய­பூர்­வ­மான எந்­த­வொரு அர­சியல் அபி­லா­சை­யை­யுமே அங்­கீ­க­ரிக்­கத் தயா­ரில்­லாத நிகழ்ச்சித் திட்டத்துடன் முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

2015 ஜன­வரி ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்று முழு­மை­யாக இரு மாதங்கள் கடந்­து­வி­டு­வ­தற்கு முன்­ன­தாக தலை­நகர் கொழும்­புக்கு வெளியே நுகே­கொ­டையில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட பொதுக்­கூட்­டத்­துடன் தொடங்­கிய ராஜபக் ஷ ஆத­ரவுச் சக்­தி­களின் அணித்­தி­ரட்டல் செயற்­பா­டுகள் இறு­தி­யாக கடந்த 8 ஆம் திகதி சனிக்­கி­ழமை இரத்­தி­ன­பு­ரியில் நடை­பெற்ற பேர­ணியில் வந்து நிற்­கி­றன. வடக்கில்  தமிழ் மக்கள் பேர­வையின் அணி திரட்டல் கடந்த மாதம் 24 ஆம் திகதி யாழ் நகரில் ' எழுக தமிழ் '  என்ற பெயரில் ஆர்ப்­பாட்ட ஊர்­வ­லத்­து­டனும் முற்­ற­வெ­ளியில் பேர­ணி­யு­டனும் தொடங்­கி­யி­ருக்­கி­றது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தொடர்ச்­சி­யாக ‘எழுக தமிழ்’ பேர­ணி­களை நடத்­தப்­போ­வ­தாக தமிழ் மக்கள் பேரவை அறி­வித்­தி­ருந்த போதிலும் , அடுத்த பேரணி குறித்து இக் கட்டுரை எழுதப்படும் வரை இன்­னமும் தக­வலைக் காண­வில்லை.

ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்ற சில வாரங்­க­ளுக்­குள்­ளா­கவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் கைப்­பற்­றக்­கூ­டி­ய­தாக இருந்த போதிலும்,  20 மாதங்கள் கடந்த நிலை­யிலும் இன்­னமும் கட்­சியை முழு­மை­யாகத் தனது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வர அவரால் முடி­ய­வில்லை. இடைப்­பட்ட காலத்தில் சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 2015 ஆகஸ்ட் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷவை முன்­னி­லைப்­ப­டுத்தி கள­மி­றங்­கு­வதைக் கூட ஜனா­தி­பதி சிறி­சே­ன­வினால் தடுக்க முடி­யா­தி­ருந்­தது. சுதந்­திரக் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை மீண்டும் கைப்­பற்றும் நோக்­குடன் ராஜபக் ஷாக்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்ற போதிலும், அது முடி­யாமல் போகும் பட்­சத்தில் தங்கள் தலை­மையில் புதி­ய­தொரு கட்­சியை தோற்­று­விப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் பற்­றியும் அவ்வப்போது அவர்கள் அறி­வித்துக் கொண்டே இருக்­கி­றார்கள். தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு புதி­ய­தொரு கட்சி தேவைப்­ப­டு­கி­றது என்று மஹிந்த ராஜபக் ஷ வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ருந்தார் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

பிர­தமர் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் சேர்ந்து அமைக்­கப்­பட்­டி­ருக்கும் தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தில் இணைந்து கொண்டு பத­வி­களைப் பெற்­றி­ருக்கும் சுதந்­ தி­ரக்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைத் தவிர, அக்­கட்­சி­யி­னதும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சிறிய பங்­காளிக் கட்­சி­க­ளி­னதும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுமார் 50 பேர் முன்னாள் ஜனா­தி­ப­திக்கே விசு­வா­ச­மாக இருந்து பாரா­ளு­மன்­றத்தில் ‘கூட்டு எதி­ரணி’ என்று தங்­களை அழைத்­துக்­கொண்டு செயற்­ப­டு­கின்­றார்கள். இவர்­க­ளுக்கு எதி­ராக ஜனா­தி­பதி சிறி­சே­ன­வினால் சுதந்­திரக் கட்­சியின்  தலைவர் என்ற வகையில் உருப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கவும் முடி­ய­வில்லை. இவர்­களை கட்­சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்­பா­ளர்கள் பத­வி­களில் இருந்து நீக்­கிய போதிலும், கட்­சியின் அடி­மட்­டங்­களில் தனக்கு ஆத­ர­வான நிலையை ஏற்­ப­டுத்த ஜனா­தி­ப­தி­யினால் இன்­னமும் இய­லாமல் இருக்­கி­றது.

ராஜபக்  ஷ முகாம் உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­க­ளுக்­காக ஆவ­லுடன் காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் இதை நடத்­து­வதில் அர­சாங்­கத்­திற்கு எந்த அவ­ச­ரமும் இல்லை.

அடுத்து நடை­பெ­றக்­கூ­டிய எந்­த­வொரு தேர்­த­லிலும் ராஜபக் ஷ விசு­வா­சி­க­ளுக்கு சுதந்­திரக் கட்­சி­யி­னதோ அல்­லது அதன் தலை­மை­யி­லான  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னதோ சார்பில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் வழங்­கப்­ப­டக்­கூ­டிய சாத்­தியம் இல்லை என்­பதால், அவர்கள் தனி­யான அணி­யாகப் போட்­டி­யிடத் தாங்கள் தயா­ரா­யி­ருப்­ப­தாக அறி­வித்­தி­ருக்­கி­றார்கள். தங்­க­ளுக்கு இருப்­ப­தாக அவர்கள் நம்­பு­கின்ற மக்கள் ஆத­ரவை நிரூ­பிப்­ப­தற்கு ராஜபக் ஷ முகாம் உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­க­ளையே முக்­கி­ய­மான கள­மாக பயன்­ப­டுத்தத் திட்டம் தீட்­டி­யி­ருக்­கி­றது என்­பது  வெளிப்­ப­டை­யா­னது.

புதிய கட்­சியை ஆரம்­பிப்­பது தொடர்பில் அவர்கள் அடிக்­கடி பேசு­கின்ற போதிலு கூட, உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு முன்­ன­தாக கட்சி ஆரம்­பிக்­கப்­ப­டக்­கூ­டிய சாத்­தி­யத்தை எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை. உள்­ளூ­ராட்சித் தேர்­தலை தொடர்ச்­சி­யாக ஒத்­தி­வைத்­துக்­கொண்டு போவ­தற்கு அர­சாங்கத் தரப்பில் கூறப்­ப­டு­கின்ற  நடை­முறைக் கார­ணங்­க­ளுக்கு அப்பால் அதற்கு பிரத்­தி­யே­க­மான அர­சியல் காரணம் ஒன்று இருக்­கி­றது என்­பதை புரிந்­து­கொள்­வ­தற்கு எவரும் அர­சியல் மேதை­யா­க-­இ­ருக்­க­வேண்­டி­ய­தில்லை. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தனது முகா­முக்கு இருக்க கூடிய மக்கள் செல்­வாக்கை நிரூ­பிக்க முடி­யு­மானால் அதற்குப் பிறகு சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மைத்­து­வத்தை மீண்டும் தன்­வ­சப்­ப­டுத்­து­வ­தற்­காக ஜனா­தி­பதி சிறி­சே­னவை கட்­சிக்குள் மேலும் பல­வீ­னப்­ப­டுத்­தக்­கூ­டிய வியூ­கங்­களை ராஜபக் ஷவினால் இல­கு­வாக முன்­னெ­டுக்கக் கூடி­ய­தாக இருக்கும். எதற்கும்  தென்­னி­லங்­கையில் புதிய கட்­சி­யொன்று அவர் தலை­மையில் உரு­வா­குமா இல்­லையா என்­பதை அடுத்து நடத்­தப்­ப­டக்­கூ­டிய ஒரு தேர்­தலே நிர்­ண­யிக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இது இவ்­வா­றி­ருக்க, யாழ் நகரில் தமிழ் மக்கள் பேர­வை­யினால் நடத்­தப்­பட்ட 'எழுக  தமிழ்' பேரணி கொழும்பு அர­சாங்­கத்­துக்கு நெருக்­கு­தலைக் கொடுத்­ததோ இல்­லையோ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு குறிப்­பாக, கூட்­ட­மைப்பின் பெரிய கட்­சி­யாக இருக்கும் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மைத்­து­வத்­துக்கு சங்கடத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை. முன்னர் கூறப்­பட்­டது போன்று, உள்­நாட்டுப் போரின் முடி­வுக்குப் பின்­ன­ரான கால கட்­டத்தில் தங்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு விரை­வான தீர்வு வேண்டி தமிழ் மக்கள் அணி­தி­ரண்ட முதன் முத­லான பெரி­ய­தொரு அர­சியல் போராட்ட இயக்­க­மாக யாழ் நகர்ப் பேரணி அமைந்­தி­ருந்­தது.

இதன் கார­ணத்­தினால், உள் நாட்­டிலும் வெளி நாட்­டிலும் பெரும் கவ­னத்தை அது இயல்­பா­கவே ஈர்த்­தது. அந்தப் பேர­ணிக்குப் பிறகு இலங்கை அர­சியல் அரங்கில் பெரும் சர்ச்­சைக்­கு­ரி­ய­வ­ராக முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் மாறி­யி­ருப்­ப­தையும் காணக்­கூ­டி­ய­தாக இரு­கி­றது. இலங்கைத் தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மைத்­து­வத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய மாற்­றத்தை விக்­னேஸ்­வ­ரனின் பேச்­சு­களும் செயல்­களும் பிர­தி­ப­லிக்­கின்­ற­னவா என்ற கேள்­வியும் பிறந்­தி­ருக்­கின்­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் 2013 செப்­டெம்பர் மாகாண சபைத் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று  முத­ல­மைச்­ச­ராக முன்னாள் உச்ச நீதி­மன்ற நீதி­ய­ரசர் வந்­த­போ­திலும், குறிப்பாக கடந்த ஒரு வரு­டத்­துக்கும் அதி­க­மான கால கட்­டத்தில் அவ­ரது பேச்­சுக்­களும் செயல்­களும் ஏனைய மூத்த தமிழ் அர­சி­யல்­வா­திகள் பலரை கிர­கணம் செய்ய ஆரம்­பித்து விட்­டன என்று என்று பல அவ­தா­னிகள் கரு­து­கி­றார்கள்.

இத்­த­கை­ய­தொரு பின்­பு­லத்தில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை முன்­னி­லைப்­ப­டுத்தி புதி­ய­தொரு அர­சியல் கட்சி அல்­லது அர­சியல் அணி உரு­வா­குமா என்ற கேள்­வி­களும் பிறந்­தி­ருக்­கின்­றன. 2015 ஆகஸ்ட் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கட்­ட­மைப்பை ஆத­ரிக்க மறுத்த விக்­னேஸ்­வரன் கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கின்ற அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வ­ராக மாறி, தமிழ் மக்கள் பேர­வையின் செயற்­பா­டு­களில் தன்னை ஈடு­ப­டுத்திக் கொள்ள ஆரம்­பித்­த­போது புதிய அர­சியல் கட்­சியை தொடங்­கு­வ­தற்­கான முன்னோடி நட­வ­டிக்­கை­யாக அது இல்லை என்று வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ருந்தார். கடந்த வருடம் டிசம்பர் மாத நடுப்­ப­கு­தியில் யாழ். நகரில் தமிழ் மக்கள்  பேர­வையின் அங்­கு­ரார்ப்­பணக் கூட்­டத்தில் ஆற்­றிய உரை­யிலும் முத­ல­மைச்சர் 'தமிழ் மக்கள் பேரவை ஒரு அர­சியல் இயக்கம் அல்ல. அது அர­சி­யலில் பங்­கேற்­ப­தற்­கான உத்­தே­சத்­தையும் கூட கொண்­ட­தல்ல' என்று குறிப்­பிட்­டி­ருந்தார். 'எழுக தமிழ்' பேர­ணியில் ஆற்­றிய உரையில் கூட அவர் ' இன்­றைய கால கட்­டத்தில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­ப­டு­வ­தி­னாலோ அல்­லது மாகாண சபை­க­ளுக்குத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தி­னாலோ எமது உரி­மை­களை நாம் வென்­றெ­டுக்க முடி­யாது. மக்கள் சக்தி எமது அர­சியல் பய­ணத்­துக்கு அவ­சியம். அத­னால்தான் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலைமைப் பத­வியை  ஏற்றேன்' என்று கூறி­யதும் கவ­னிக்­கத்­தக்­கது. அர­சியல் கட்­சி­யா­கவோ அல்­லது அர­சியல் அணி­யொன்­றா­கவோ செயற்­படும் நோக்கம் பேர­வைக்கு இல்லை என்று தெளி­வு­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே அதன் செயற்­பா­டு­களில் தன்னை ஈடு­ப­டுத்திக் கொள்ள முன்­வந்­த­தா­கவே முத­ல­மைச்­சரின் விளக்­கங்கள் அமைந்­தி­ருந்­தன.

ஆனால் தமிழ் மக்கள் பேர­வையின் செயற்­பா­டு­களில் தீவிர பங்­கேற்கும் அர­சி­யல்­வா­தி­களில் ஒரு­வ­ரான ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் அண்­மையில் கொழும்பு ஆங்­கில வாரப் பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்த கருத்­துக்கள் ‘எழுக தமிழ்’ பேர­ணிக்கு பிறகு அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கக்­கூடிய   'மருட்­சியை ' பிர­தி­ப­லிப்­ப­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

மாற்று அர­சியல் கட்­சி­யொன்­றுக்­கான தேவை­யி­ருப்­ப­தாக நீங்கள் கரு­து­கின்­றீர்­களா? என்று  பிரே­மச்­சந்­தி­ர­னிடம் கேட்­கப்­பட்ட போது அவர் அளித்த பதில் வரு­மாறு;

"புதிய அர­சியல் கட்­சி­யொன்று நிச்­ச­ய­மாகத் தேவை. எழுக தமிழ் பேர­ணியின் போதும் அது விளங்கிக் கொள்­ளப்­பட்­டது. இன்­னொரு தமிழ்க் கட்­சிக்கு முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தலைமை கொடுக்க வேண்டும் என்று பலர் யோசனை தெரிவித்திருக்கிறார்கள். பெருமளவு தமிழ் மக்கள் இப்போது முதலமைச்சரை சுற்றி அணி திரளுகிறார்கள். தமிழர்களின் அக்கறைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு மனிதராக அவரை அவர்கள் நோக்குகிறார்கள். அத்தகைய மாற்றுக் கட்சிக்கான அவசர தேவையொன்று இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் முதலமைச்சர் இன்னொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் என்று நான் நிச்சயமாகக் கூறவில்லை. நானும் அவ்வாறு புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு கட்சிக்கான தேவை இருப்பதாக மக்கள் நிச்சயமாகக் கருதுகிறார்கள். அத்தகைய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளுமாறு விக்னேஸ்வரனை அவர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். இப்போது உள்ளதைப் போன்று நிலைவரங்கள் தொடருமாக இருந்தால், தமிழ் மக்களின் அக்கறைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கக்கூடிய புதியதொரு அரசியல் கட்சியை அமைக்க வேண்டிய தேவை நிச்சயம் ஏற்படும்." புதிய தமிழ் கட்சியின் தேவை குறித்து பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கும் இக்கருத்துக்கள் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவைக்கு அனுசரணையாகச் செயற்படுகின்ற ஏனைய அரசியல்வாதிகளின் அபிப்பிராயங்கள் எதுவோ தெரியவில்லை. (பிரேமச்சந்திரனைப் போன்றே அவர்கள் ஒவ்வொருவரும் ஏற்கெனவே தங்கள் சொந்தத்தில் கட்சிகளைக் கொண்டிருக்கிறார்கள்)  குறிப்பாக, இது குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிரதிபலிப்பை அறிய தமிழர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.