(என்.வீ.ஏ.)

பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெறுவதற்கு இங்கிலாந்து எடுத்துக்கொண்ட கடும் முயற்சியை மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் க்ரெய்க் ப்றெத்வெய்ட் தனது பொறுமையான துடுப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார்.

இதன் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டி ஞாயிறன்று (20) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

முதலாவது இன்னிங்ஸில் மிக நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடி 160 ஓட்டங்களைக் குவித்த ப்றெத்வெய்ட், 2ஆவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்று    தனது அணி தோல்வி அடைவதைத் தடுத்தார்.

இங்கிலாந்தினால்  65 ஓவர்களில்  நிர்ணயிக்கப்பட்ட 282 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 5 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.

முதல் இன்னிங்ஸில் 710 நிமிடங்கள் (கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்கள்) துடுப்பெடுத்தாடி 489 பந்துகளை எதிர்கொண்டு 160 ஓட்டங்களைப் பெற்ற ப்றெத்வெய்ட் 2ஆவது இன்னிங்ஸில் 245 நிமிடங்கள் தாக்குப்பிடித்து 184 பந்துகளை எதிர்கொண்டு 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்தப் போட்டியில் மொத்தமாக 16 மணித்தியாலங்களுக்கு 5 நிமிடங்கள் குறைவாக துடுப்பெடுத்தாடிய ப்றெத்வெய்ட் 673 பந்துகளை மொத்தமாக எதிர்கொண்டார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்ட மேற்கிந்தியரானார்.

இரண்டாவது இன்னங்ஸில் மேற்கிந்தியத் தீவுகளின் முதல் 3 விக்கெட்கள் 39 ஓட்டங்களுக்கு சரிந்தபோதிலும் ப்றெத்வெய்ட், ஜேர்மெய்ன் ப்ளக்வூட் ஆகிய இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து 50 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

ப்ளக்வூட் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்த ஜேசன் ஹோல்டரும் வந்த வேகத்தில் ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினார்.

எனினும் ப்றெத்வெய்ட், ஜொஷுவா டா சில்வா (30 ஆ. இ.) ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 21 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 42 ஓட்டங்களைப் பகிர்ந்து 2ஆவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைவதை உறுதிசெய்தனர்.

முன்னதாக போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை தனது 2ஆவது இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து 6 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பகல்போசன இடைவேளையுடன் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: 507 - 9 விக். டிக்ளயார்ட் (ஜோ ரூட் 153, பென் ஸ்டோக்ஸ் 120, டான் லோரன்ஸ் 91, வீரசாமி பேர்மோல் 126 - 3 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது 411 (க்ரெய்க் ப்றெத்வெய்ட் 160, ஜேர்மெய்ன் ப்ளக்வூட் 102, ஜெக் லீச் 118 - 3 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: 185 - 5 விக். டிக்ளயார்ட் (டான் லோரன்ஸ் 41, ஸக் க்ரோவ்லி 40, வீரசாமி பேர்மோல் 29 - 2 விக்., ஜேடன் சீல்ஸ் 34 - 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 135 - 5 விக். (க்ரெய்க் ப்றெத்வெய்ட் 56 ஆ.இ., ஜோஷவா டா சில்வா 30 ஆ.இ., ஜெக் லீச் 36 - 3 விக்., சக்கிப் மஹ்மூத் 21 - 2 விக்.)