மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றினை உடைத்து 24 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கதொலைபேசிகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) ஒருவரை கைது செய்ததையடுத்து இதுவரை 7 பேர் கைது செய்துள்ளதுடன் 43 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் பிரதான வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் கடந்த முதலாம் திகதி இரவு  உடைக்கப்பட்டு அங்கிருந்த 24 இலட்சம் ரூபா பெறுமதியான 75 கையடக்கதொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டன. 

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழு மேற்கொண்ட விசாரணையில் அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் ஒரு பெண் ஒருவர் உட்பட 3 பேர், அக்கரைப்பற்றில் ஒருவருமாக 4 பேரை கடந்த 13 ஆம் திகதி 23 கையடக்கதொலைபேசிகளுடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த கொள்ளையின் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகிய நிலையில் 19ஆம் திகதி இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பிரதான சூத்திராரியுடன் பேரதீவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு 13 கையடக்க தொலைபேசிகள் மீட்டகப்பட்டதுடன் இவர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தி வியளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த கொள்ளையர்கள்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் வழங்கிய தகவலுக்கமைய மட்டக்களப்பு சல்லிப்பிட்டி பகுதியில் இந்த கொள்ளை குளுவைச் சேர்ந்த ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு கையடக்க தொலைபேசியுடன் கைது செய்ததையடுத்து இந்த கொள்ளையுடன் தொடர்புடைய ஒரு பெண் உட்பட 7 பேரை இதுவரை கைது செய்துள்ளதுடன் 43 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.