இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கைக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிரிக்ஸ் - பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிற்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே ரஷ்ய ஜனாதிபதி புடின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற ரஷ்ய ஜனாதிபதி புடின், ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன, இந்த நட்புறவு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதே நேரம் சீன ஜனாதிபதி ஷிங் பிங்யிற்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பும் நேற்று இடம்பெற்றது.

நட்புறவு நாடுகள் என்றவகையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இதன்போது இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.  சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவுக்கு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வு குறித்தும் பேசப்பட்டது. 

இலங்கையில் வேகமாக பரவிவரும் சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு சீன அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளைப் பாராட்டிய ஜனாதிபதி சிறிசேன, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவுக்கு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் இலங்கையில் சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பாக இடம்பெறும் விசேட நிகழ்வுகள் தொடர்பாகவும் சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.

மொரகாகந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக சீன அரசாங்கம் வழங்கிவரும் பங்களிப்பினை பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பெரும் பலம்பொருந்தியவையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாகவும் சீன - இலங்கை தலைவர்கள் விரிவாக ஆராய்ந்தனர்.