உக்ரேன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம் - 14 நாடுகளை சேர்ந்த இலங்கைக்கான தூதுவர்கள் தெரிவிப்பு

By T. Saranya

19 Mar, 2022 | 12:21 PM
image

இறையாண்மையுள்ள மற்றும் ஜனநாயக நாடான உக்ரேன் மீதான ரஷ்யாவின் தூண்டுதலற்ற, நியாயமற்ற மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

இந்த மூர்க்கத்தனமான தாக்குதல் ஐக்கிய நாடுகள் சாசனம் உள்ளடங்கலான சர்வதேச சட்டத்தின் முழுமையான மீறலாகும் என தெரிவித்து 14 நாடுகளை சேர்ந்த இலங்கைக்கான தூதுவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

உக்ரேனில் மனிதாபிமான பேரழிவை ரஷ்யா ஏற்படுத்தியதை உலகமே திகிலுடன் பார்த்தது. பொதுமக்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான ரஷ்ய தாக்குதல்கள் வியத்தகு முறையில் அதிகரித்து வருவது ஏராளமான பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது. 

மில்லியன் கணக்கான சாதாரண பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இது கடந்த 70 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டுள்ள மிக வேகமாக வளர்ந்து வரும் அகதிகள் நெருக்கடியாகும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பானது ஒரு அமைதியான நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதொரு தூண்டுதலற்றதும் சட்டவிரோதமானதுமான தாக்குதல் ஆகும். உலகெங்கிலும் சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளை ரஷ்யா அச்சுறுத்துகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸின் பின்வரும் நாங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம் ஐக்கிய நாடுகள் சாசனம் கடந்த காலங்களில் சவால் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது சமாதானம், பாதுகாப்பு, அபிவிருத்தி, நீதி, சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் பக்கம் உறுதியாக நிற்கிறது.

இந்த விழுமியங்கள் உக்ரைனிலும் அனைத்து மனிதகுலத்திற்கும் மேலோங்குவதற்கு சர்வதேச சமூகமானது தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டும். எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரேனுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய அரசாங்கத்தின் தாக்குதலைக் கண்டிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். 

மார்ச் 2 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், அமோக பெரும்பான்மையாகிய 141 நாடுகள் ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து வாக்களித்தன. சர்வதேச சமூகத்தில் இருந்து ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. 

உக்ரேனை ஆதரிக்கும் நாடுகள், ரஷ்யாவிற்கு அதிக செலவினை ஏற்படுத்துவதற்காக ரஷ்யா மீது முன்னோடியில்லாத வகையில் நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் மீது இலக்கு வைக்கப்பட்ட தடைகளைச் சுமத்தியுள்ளன. 

உக்ரேனுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடரும் ரஷ்யாவின் திறனைக் குறைப்பதும், ரஷ்யாவை விரோதப் போக்கில் இருந்து பின்வாங்குமாறு அழுத்தம் கொடுப்பதும் இதன் நோக்கமாகும். வங்கிகள் முதல் எண்ணெய் நிறுவனங்கள் வரை, கால்பந்து லீக்குகள் வரை, புடினினது நடவடிக்கைகளுக்குப் பின்விளைவுகள் உள்ளன எனவும் அவரது ஆட்சி இனி சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துவதை நாங்கள் பார்த்திருக்கிறோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உக்ரேனின் நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகள் கணிசமான அளவு பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளைச் செய்துள்ளதுடன் பல நாடுகள் போரிலிருந்து தப்பியோடிய உக்ரேனிய குடும்பங்களுக்கு தங்கள் எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளன. 

ரஷ்யா ஆக்கிரமிப்புக்கான சாக்குப்போக்காக தவறான கதைகளைப் பரப்பிவருகின்றது. அதன் படையெடுப்பை நியாயப்படுத்தும் ஒரு போலி முயற்சியில் ரஷ்ய அரசாங்கம் உக்ரேனுக்கு எதிராக ஒரு ஆக்கிரோஷமான தவறான தகவல் பிரச்சாரத்தை நடத்தியுள்ளது. அதன் ஜனநாயக அண்டை நாடுகளைத் தகர்க்கும் ரஷ்யாவின் பிரச்சாரத்தில் எந்தவிதமான நியாயமும் இல்லை. 

நேட்டோவை ஆத்திரமூட்டுவதாக ரஷ்யா பொய்யாக குற்றஞ் சாட்டுகின்றது. நேட்டோ, எப்போதும் ஒரு பாதுகாப்புக் கூட்டணியாக இருந்து வருவதுடன், அது ரஷ்யாவிற்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாகவும் அமையமாட்டாது. 

உக்ரேன் மற்றும் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கான தீவிர ஆதரவில் இணையுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்தல் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதரகங்களின் தலைவர்கள் என்ற வகையில், உக்ரேன் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனம் உள்ளடங்கலான சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். 

ரஷ்யாவின் பகைமையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இலங்கையை எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உக்ரேனின் இறையாண்மை மற்றும் சுதந்திரம் மீட்டமைக்கப்படுவதை உறுதிசெய்ய- உலகம் முழுவதும் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்.

நாங்கள் உக்ரைனுடன் நிற்கின்றோம்; மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் சுதந்திரம், ஜனநாயகம் இறையாண்மைக்காக முன்னிற்கிறோம் எனவும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளவர்களாக  அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி, கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்,   ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் டெனிஸ் சாய்பி, பிரான்ஸ் தூதுவர்  எரிக் லாவெர்டு,  ஜெர்மனியத் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட், இத்தாலியத் தூதுவர்  ரீட்டா கியுலியானா மன்னெல்லா,  நெதர்லாந்துத் தூதுவர்   தஞ்சா கோங்கிரிஜ், நியூசிலாந்து உயர் ஸ்தானிகர்  மைக்கேல் எப்பள்டன்,  நோர்வே தூதுவர்  டிரைன் ஜோரன்லி எஸ்கேடல், ஜப்பானியத் தூதுவர்  ஹிடேகி மிசுகோஷி,  ரூமேனியத் தூதுவர் விக்டர் சியுஜ்டியா,சுவிட்சர்லாந்தின் தூதுவர் டொமினிக் ஃபர்க்லர்,  ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன்,  ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே. சங் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right