(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
ஆட்சியைப் பொறுப்பேற்று நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வினை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளோம்.
மீண்டும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொள்ளுமளவிற்கு முட்டாள்கள் எவரும் இந்நாட்டில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் தற்போது பிரச்சினைகளுக்கு நான் பொறுப்பல்ல என்று ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறெனில் இவற்றுக்கு யார் பொறுப்பேற்பது? இந்தியாவா? ஆம் என்றால் அதனையாவது கூற வேண்டும்.
ஜனாதிபதி அவரது விசேட உரையில் எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்குமாறு மக்களிடம் கூறுகின்றார். ஆனால் நாமல் ராஜபக்ஷ அவருக்கு சவால் விடுக்கும் வகையில் நாட்டில் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடனும் , அதிசொகுசு வாகனங்களுடனும் பேரணி செல்கின்றார்.
பொலிஸார் இதற்கு பாதுகாப்பு வழங்குகின்றனர்.
நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பித்த போதே சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல் இருந்தமைக்கான பொறுப்பினையும் இவர்களே ஏற்க வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் , மத்திய வங்கி ஆளுனருக்கும் தொடர்ந்தும் அந்த பதவிகளை வகிப்பதற்கு உரிமை கிடையாது.
நிதி அமைச்சர் அமெரிக்காவுக்காக வேலை செய்வதாயின் அந்நாட்டுக்கே சென்று விட வேண்டும், அதே வேளை மத்திய வங்கிக்கும் பொறுப்பானவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆட்சியைப் பொறுப்பேற்று மக்களின் நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.
ஜனாதிபதியை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாள்கள் எவரும் இந்நாட்டில் இல்லை என்றார்.