நாட்டை மோசமான நிலைக்கு ஜனாதிபதி தள்ளி விட்டுள்ளார் - எதிர்க்கட்சி கடும் சாடல்

18 Mar, 2022 | 08:45 PM
image

(எம்.மனோசித்ரா)


நாட்டை கடந்த 73 ஆண்டுகளாக வங்குரோத்தடைய விடாமல் கடன்கள் உரிய முறையில் மீளச் செலுத்தப்பட்டு வந்தன. 

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை உடைத்து இவ்வாறானதொரு மோசமான நிலைக்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கோட்டாபய ராஜபக்ஷவின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே மக்கள் அவருக்கு வாக்களித்தனர் எனினும், அவர் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளார். 

கோட்டாபயவினுடைய பாடலையும் கேலிக்காக பயன்படுத்துகின்றனர். 

நாம் எமது வாகனத்திற்கு டீசல் பெறும் போது அதிகாலை 1 மணியாகும், கெஸ்பேவ பகுதியில் மக்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். 

பல கிலோ மீற்றர்களின் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

உரத்தை இலவசமாகத் தருவதாகக் கூறிய கோட்டாபய ராஜபக்ஷ இன்று 20 000 ரூபாவிற்கும் உரத்தை கொள்வனவு செய்ய முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளார். 

கடந்த 73 ஆண்டுகளாக நாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வங்குரோத்தடைய இடமளிக்காமல் கடன்கள் மீள செலுத்தப்பட்டு வந்தன. எனினும் அந்த நம்பிக்கையையும் தற்போது உடைத்துள்ளனர்.

மாதாந்தம் 500 - 600 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கக் கூடியளவிலான வரி வருமானத்தை நீக்கிக் கொண்டனர். 

இவ்வாறு வருமானத்தை நீக்கிக் கொண்டு திறைசேரியில் பாரிய தட்டுபாட்டை ஏற்படுத்திக் கொண்டனர்.

இந்த தட்டுப்பாட்டை நிரப்புவதற்காக பணம் அச்சிடப்பட்டது, அனைவரும் வேண்டாம் என்று கூறிய போதும் அதனை செய்தனர்.

டொலரின் பெறுமதிக்கு சமாந்தரமாக ரூபாவின் பெறுமதியை வலுக்கட்டாயமாக தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று கூறிய போதிலும் அதனை செய்தனர்.

வரலாற்றில் என்னுமில்லாதவாறு டொலரின் பெறுமதியை 280 ரூபாவாக அதிகரிக்கச் செய்துள்ளனர் ஆனால்,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவற்றில் எந்தவொரு நெருக்கடியிலும் நான் தொடர்புபடவில்லை என்று கூறுகின்றார்.

அவ்வாறெனில் வருடாந்தம் 600 பில்லியன் ரூபா வருமானத்தை நீக்கிக் கொண்டது யார்? இரவோடிரவாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு உரத்தை தடை செய்தது யார்? என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right