
மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்கின்றோம். அதேசமயம், கட்சி யின் கொள்கை, கோட்பாடுகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் இணைத்தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கேட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய பேரவையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் ஜனநாயகம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியாகவே இருக்கின்றோம். விசுவாசமான நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். அனைவரும் கருத்துக்களை வெளியிடுவதற்கு உரிமையுள்ளவர்கள்.
மேலும் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவற்றின் கொள்கைகளுக்கு உட்பட்டே செயற்படுவதும் கட்சியைப் பாதுகாக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.
மக்கள் சார்பான மற்றும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம். அதேசமயம் ஒரு கட்சியின் கட்டமைப்புக்கும் கோட்பாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவ்விதமான செயற்பாடுகள் அமையக்கூடாது என்றார்.
தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் வலியுறுத்துவதையும் நோக்காகக் கொண்டு் தமிழ் மக்கள் பேரவை அங்குராட்பணம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வைத்திய நிபுணர் பு.லக்ஷ்மன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் செயலாளர் ரி. வசந்தராஜா ஆகியோரை இணைத்தலைமையாகவும் கொண்ட இப்பேரவையானது மதத்தலைவர்கள், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரின் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை யாழில் தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. இது இவ்வாறு இருக்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையானது அரசியல் கட்சியல்ல என்றும் மாறாக மக்களை நலன்களை காப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள மக்கள் இயக்கமாகும் எனவும் வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.