சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை தானே படுகொலை  செய்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வு வீரர் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அக்கடிதத்தில் உள்ள விடயங்களின் நம்பகத்தன்மையினை உறுதிப்படுத்தவும் மேலும் சில விடயங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளியன்று கேகாலை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய எதிரிசிங்க ஜயமான்ன எனும் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

அவரது இடுப்பில் சொருகியிருந்த, இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கையளிக்குமாறு கூறி எழுதப்பட்டிருந்த கடிதத்தில் லசந்தவை தானே கொலை செய்ததாகவும் தற்போது லசந்தவின் சாரதியை கடத்தி அச்சுறுத்திய விவகாரம் தொடர்பில் சிறையில் உள்ள பிரேமாந்த உடலாகம எனும் தனது நண்பரான இராணுவ புலனாய்வு உறுப்பினரை விடுவிக்குமாரும் அவர் கூறியிந்தார்.

 இந் நிலையில் கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் மேற்பார்வையில் இடம்பெறும் விசாரணைகளுக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழுவும் இது தொடர்பிலான விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது. தற்கொலைச் செய்துகொண்ட இராணுவ வீரர் லசந்தவை தான் கொன்றதாக தற்போது கூறியமைக்கான காரணம், அப்படியானால் தற்கொலைச் செய்ததற்கான காரணம் என்பவற்றுடன் லசந்தவை கொலை செய்ய அவருக்கு இருந்த தேவைப்பாடு என்ன, அவருக்கு பின்னார் இருந்து அவரை எவரேனும் அச்சுறுத்தினரா? அல்லது அவருக்கு மன அழுத்தம் ஏதும் இருந்ததா என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இவ்விசாரணைகளில், பிரதானமாக கடிதத்தில் பிரேமாந்த உடலாகம எனும் தற்போதுள்ள லசந்த விவகாரத்தின் சந்தேக நபரின் பெயருக்கு பதிலாக எழுதப்பட்டிருந்த மலிந்த உடலாகம யார் எனவும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

லசந்த கொலையுடன் தொடர்புடைய உயர் மட்ட அதிகாரிகள் எவரையேனும் காப்பாற்றும் நோக்கில் அல்லது அச்சுறுத்தல் ஒன்றின் கீழ் குறித்த இராணுவ வீரர் இவ்வாறு ஒரு கடிதத்தை எழுதினாரா?, அல்லது எவரேனும் எழுதி வைத்தனரா என புலனாய்வு பிரிவினர் தற்போது விசாரணை செய்கின்றனர். இது லசந்த கொலை விசாரணையை திசை திருப்பும் வேலையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் மேர்பார்வையில் உதவி  பொலிஸ் அத்தியட்சர் திசேராவின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு விசாரணை அதிகாரியான பொலி  பரிசோதகர் நிசாந்த சில்வா, சுதத் குமார ஆகியோரின் கீழ் இரு குழுக்கள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.