அவுஸ்திரேலியா - பாகிஸ்தானுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு

By T Yuwaraj

16 Mar, 2022 | 09:37 PM
image

(என்.வீ.ஏ.)

அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கராச்சி தேசிய விளையாட்டரங்கில் பாபர் அஸாம், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் குவித்த அபார  சதங்களால் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய இரண்டாவது டெஸ்ட்    கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (16) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட இமாலய வெற்றி இலக்கான 506 ஓட்டங்களை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 171.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 63 ஓட்டங்களால் வெற்றி இலக்கை அடையத் தவறியது.

முதலாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானை 148 ஓட்டங்களுக்கு சுருட்டிய அவுஸ்திரேலியா, கடைசி இன்னிங்ஸிலும் சாதித்து வெற்றிபெறலாம் என எதிர்பார்த்து.   ஆனால், அதன் எதிர்பார்ப்பை பாகிஸ்தான் நிறைவேறவிடவில்லை.

முதல் 3 தினங்களிலும் பெரும் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியாவை கடைசி இரண்டு நாட்களில்  மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான்  திணறடித்தது.

போட்டியின் 4ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (15) பகல் போசன இடைவேளைக்கு முன்னர் 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், 11 மணித்தியாலங்களுக்குமேல் துடுப்பெடுத்தாடி இன்றைய தினம் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 7 விக்கெட்களை இழந்து 443 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பாகிஸ்தான் அதன் முதல் 2 விக்கெட்களை செவ்வாய்க்கிழமை  21 ஓட்டங்களுக்கு  இழந்தபோது அவுஸ்திரேலியா மிகப் பெரிய வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அணித் தலைவர் பாபர் அஸாம், அப்துல்லா ஷிபிக் ஆகிய இருவரும் நான்காம் நாள் ஆட்டத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் ஜோடியாக மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 171 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 228 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை குழப்பத்தில் ஆழ்த்தினர்.

அப்துல்லா ஷபிக் 7 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் துடுப்பெடுத்தாடி 305 பந்துகளை எதிர்கொண்டு 96 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (249 - 3 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 28 ஓட்டங்கள் சேர்ந்தபோது மற்றொரு விக்கெட்டை (பவாட் அலாம் 9) பாகிஸ்தான் இழந்தது.

அதன் பின்னர் பாபர் அஸாமுடன் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த முன்னாள் அணித் தலைவர் மொஹமத் ரிஸ்வான் 115 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பாபர் அஸாம் 196 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

பாபர் அஸாம் 10 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடி 425 பந்துகளை எதிர்கொண்டு 21 பவண்ட்றிகளையும் ஒரு சிக்ஸையும் அடித்திருந்தார்.

பாபர் அஸாம் ஆட்டமிழந்தைத் தொடர்ந்து பாஹீம் அஷ்ரப் (0), சஜித் கான் (9) ஆகிய இருவரும் சீரான இடைவெளியில் ஆட்மிழந்தனர்.

ஆனால் மொஹமத் ரிஸ்வானும் நௌமான் அலியும் கடைசி 46 பந்துகளைத் தாக்குப்பிடித்து டெஸ்ட் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடிக்க உதவினர்.

கிட்டத்தட்ட 4 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய ரிஸ்வான் 177 பந்துகளை சந்தித்து 11 பவண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன்  104 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 556 - 9 விக். டிக்ளயார்ட் (உஸ்மான் கவாஜா 160, அலெக்ஸ் கேரி 93, ஸ்டீவன் ஸ்மித் 72, நெதன் லயன் 38, டேவிட் வோர்னர் 36, பெட் கமின்ஸ் 34 ஆ.இ., பாஹீம் அஷ்ரவ் 55 - 2 விக்.)

பாகிஸ்தான் 1ஆவது இன்: 148 (பாபர் அஸாம் 36, நௌமான் அலி 20 ஆ.இ., இமாம்-உல்-ஹக் 20, மிச்செல் ஸ்டார்க் 29 - 3 விக்., மிச்செல் ஸ்வெப்சன் 32 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 97 - 2 விக். டிக்ளயார்ட் (உஸ்மான் கவாஜா 44 ஆ.இ., மார்னுஸ் லபுஸ்சானே 44)

பாகிஸ்தான் 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்குவந்தபோது 443 - 7 விக். (பாபர் அஸாம் 196, மொஹமத் ரிஸ்வான் 104 ஆ.இ., அப்துல்லா ஷபிக் 96, நெதன் லயன் 112 - 4 விக்.) ஆட்டநாயகன்: பாபர் அஸாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right