அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் நேற்று 65-வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் தட்டிச் சென்றார்.

முன்னதாக, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஸ்டீவ் ஹார்வே கொலம்பியாவின் அரியட்னா குடியர்ரெஸ் இந்த ஆண்டிற்கான உலக அழகி என்று தவறுதலாக அறிவித்தார். 

உலக அழகி பட்டம் வென்ற மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார் அரியட்னா குடியர்ரெஸ். அவருக்கு 2014ஆம் ஆண்டிற்கான உலக அழகியான பவுலினா வேகா உலக அழகி கீரிடத்தையும் பட்டத்தையும் அணிவித்தார்.

ஆனால் அரியட்னா குடியர்ரெஸின் மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஸ்டீவ் ஹார்வே ”என்னை மன்னித்துவிடுங்கள். நான் உலக அழகி பெயரை தவறுதலாக அறிவித்து விட்டேன்,  பிலிப்பைன்சை சேர்ந்த அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் தான் 2015ஆம் ஆண்டின் உலக அழகி” என்று அறிவித்தார். 

இதை கேட்ட பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கொலம்பியாவின் அரியட்னா குடியர்ரெஸ் அணிந்திருந்த உலக அழகி கீரிடம்  பிலிப்பைன்ஸ் அழகி பியா அலோன்ஜோவின் தலைக்கு மாறியது. 

உலக அழகி போட்டியில் நடைபெற்ற இந்த குளறுபடி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.