கலஹா – தெல்தோட்டை, பட்டியகம மேற்பிரிவு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தெல்தோட்டை பட்டியகம மேற்பிரிவு பிரதேசத்தில் தொலைபேசி கோபுர திருத்தப்பணிகளை மேற்கொண்டு மீண்டும் அலுவலகம் திரும்பும் போதே குறித்த வாகனம் வேகக்கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் குடைசாய்ந்துள்ளது. 

இதன்போது அதில்  இருவர் பயணித்து இருந்ததாகவும் அவர்கள் இருவரும் சம்பவத்தின் போது  பள்ளத்துக்குள் குடைசாய்ந்த கெப் வாகனத்திற்குள் உயிரிழந்த நிலையில்  மீட்கப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

35 மற்றும் 64 வயதான கம்பளை மற்றும் கண்டியை சேர்ந்த இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். 

சடலங்கள் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.