முடிவு தெரியாத ஆயுத மோதல் 'ரஷ்ய உக்ரேனிய நெருக்கடிக்குள்  மரித்துப் போகும் மனிதம்'

14 Mar, 2022 | 01:42 PM
image

(சதீஷ் கிருஷ்ணபிள்ளை)

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும், ரஷ்ய உக்ரேனிய ஆயுத மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. எந்தவொரு போருக்கும் உரித்தேயான மனிதப் பேரவலங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

பிஞ்சுகள் பலியாகின்றன. மருத்துவமனைகள் பிணக்கூடங்களாகின்றன. இழப்பதற்கு எதுவும் இல்லாமல், குடும்பங்கள் இடம்பெயருகின்றன.

ரஷ்யப் படைகள் எல்லை தாண்டி உக்ரேனிய மண்ணுக்குள் கால்பதித்து ஏறத்தாழ மூன்று வாரங்கள். 

இந்தப் படைகளின் குண்டுத் தாக்குதல்கள், எறிகணை வீச்சுக்கள் இடையறாது தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. தாமும் ஓயப் போவதில்லை என்ற திடசங்கற்பத்துடன் உக்ரேனியப் படைகளுடன் அந்நாட்டு மக்களும் விடாமல் போராடிக் கொண்டு தானிருக்கிறார்கள்.

சண்டையை நிறுத்த வேண்டும் என்று வெளியில் இருந்து தொடுக்கப்படும் அழுத்தங்கள் பொருட்டாக மதிக்கப்படுவது கிடையாது.

மேலைத்தேய நாடுகள் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகள், உக்ரேனிய மண்ணில் ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தவில்லை. 

உக்ரேன் என்ற பெயரை இல்லாதொழித்து, அந்தத் தேசத்தை ரஷ்ய நிலப்பரப்பிற்குள் விழுங்கிக் கொள்ளும் புட்டினின் மனவுறுதியை சீர்குலைத்ததாகவும் தெரியவில்லை.

இந்த யுத்தத்தின் முற்றுப்புள்ளி என்பது, புட்டின் இன்னமும் எவ்வளவு தூரம் செல்வார் என்பதிலும், உக்ரேனிய மக்களின் எதிர்ப்பு எந்தளவு நீடிக்கும் என்பதிலும் தங்கியிருக்கின்றது. 

உக்ரேனிய மண்ணை புட்டின் ஆக்கிரமிக்கக்கூடிய சூழலை சகல வழிகளிலும் ஏற்படுத்தி, உக்ரேனிய மக்களைப் போருக்குள் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறது மேலைத்தேய சமூகம்.

இந்த சமூகத்தின் போலியான புற அழுத்தங்கள் ரஷ்யாவை அசைத்துப் பார்க்குமே தவிர, உக்ரேனில் இரண்டில் ஒன்றைப் பார்த்தே தீருவது என்ற புட்டினின் திடசங்கற்பத்தை எதுவும் செய்யாது.

இந்த யுத்தம் இங்கிருந்து எங்கே செல்லும் என்று எவரேனும் கேட்பார்களாயின், இதற்குப் பதில் அளிப்பது மிகவும் கடினமான காரியம்.

விவிலியக் கதையில் சொல்வது போல, உக்ரேனியப் படைகள் தாவீது என்றால், ரஷ்யப் படைகள் இராட்த கோலியாத் போன்று இருக்கின்றன

உக்ரேனியப் படைகள் என்ன தான் மனவுறுதி கொண்டவையாக இருந்தாலும் சிறு கவணால் அடித்து ரஷ்யப் படைகளை வீழ்த்துவதெல்லாம், கற்பனையிலும் புனைவிலும் மாத்திரமே நிகழக்கூடியவை.

அமெரிக்கா கோடிக்கணக்கான டொலர்கள் பெறுமதி உள்ள இராணுவ உதவிகளை உக்ரேனுக்கு வழங்கலாம்.

நேட்டோவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ரஷ்யப் படைகளை தோற்கடிப்பதற்காக தடைகளைத் தாண்டி ஆயுதங்களையும் அனுப்பி வைக்கலாம். 

போர்க்களத்தில் பட்டினியை எதிர்கொள்ளும் உக்ரேனிய மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக உணவும் அனுப்பி வைக்கப்படலாம்.

இவையெல்லாம் ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரேனிய மக்களை கிளர்;ந்தெழச் செய்யக்கூடிய உளவுரணை வழங்குமே தவிர, படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து உக்ரேனை விடுதலை பெறச் செய்ய வழிவகுக்க மாட்டாது.

உக்ரேனிய - ரஷ்ய யுத்தத்தைப் பொறுத்தவரையில், மேலைத்தேய நாடுகள் தந்திரமான போக்கையே அனுசரிக்கின்றன. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-13#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right