தோல்வியிலிருந்து மீள இலங்கை கடுமையாகப் போராட வேண்டி வரும்

14 Mar, 2022 | 10:02 AM
image

(என்.வீ.ஏ.)

பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோசமான நிலையில் இருக்கும் இலங்கை தோல்வியில் இருந்து மீள்வதற்கு கடுமையாக போராட வேண்டி வரும்.

அதிசயம் நிகழ்ந்தாலன்றி இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை தோல்வி அடைவது தவிர்க்க முடியாது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நினைத்துப் பார்க்கமுடியாத இமாலய வெற்றி இலக்கான 447 ஓட்டங்களை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஜஸ்ப்ரிட் பும்ராவின் 3ஆவது பந்தில் ஆரம்ப வீரர் லஹிரு திரிமான்ன ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

திமுத் கருணாரட்ன 10 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு கடினமானபோதிலும் போட்டியில் 3 தினங்கள் முழுமையாக மீதம் இருப்பதால் மிகவும் பொறுமையாகவும் கவனமாகவும் துடுப்பெடுத்தாடினால் இலங்கையினால் அதிசயிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் அது சாத்தியப்படும் என எதிர்பார்க்கமுடியாது.

போட்டியின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 86 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையிலிருந்து தொடர்ந்த இலங்கையினால் கடைசி 4 விக்கெட்களுக்கு மேலதிகமாக 23 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இலங்கை கடைசி சிறப்பு துடுப்பாட்டக்காரர் நிரோஷன் திக்வெல்ல 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்திய பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 4 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 10 ஓவர்கள் வீசி 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். 

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பதிவு செய்த 8அவது 5 விக்கெட் குவியல் இதுவாகும். அவரைவிட மொஹம்மத் ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 9 விக்கெட்களை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

ஷ்ரேயாஸ் ஐயர் இப் போட்டியில் 2ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் ரிஷாப் பன்ட்டும் அரைச் சதம் பெற்றார். அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, ஹனுமா விஹாரி ஆகியோரும் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

இந்தியா 184 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 63 ஓட்டங்கள் போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது எனலாம்.

இலங்கை பந்துவீச்சில் ப்ரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய ஆகிய இருவரும் தங்களிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: 252 (ஷ்ரேயாஸ் ஐயர் 92, ரிஷாப் பன்ட் 39, ஹனுமா விஹாரி 31, ப்ரவீன் ஜயவிக்ரம 81 - 3 விக்., லசித் எம்புல்தெனிய 94 - 3 விக்., தனஞ்சய டி சில்வா 32 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: 109 (ஏஞ்சலோ மெத்யூஸ் 43, நிரோஷன் திக்வெல்ல 21, ஜஸ்புரித் பும்ரா 24 - 5 விக், மொஹம்மத் ஷமி 18 - 2 விக்., ரவிச்சந்திரன் அஷ்வின் 30 - 2 விக்.)

இந்தியா 2ஆவது இன்: 303 - 9 விக். டிக்ளயார்ட் (ஷ்ரேயாஸ் ஐயர் 67, ரிஷாப் பன்ட் 50, ரோஹித் ஷர்மா 46, ஹனுமா விஹாரி 35, ப்ரவீன் ஜயவிக்ரம 74 - 5 விக்., லசித் எம்புல்தெனிய 87 - 3 விக்.)

இலங்கை 2ஆவது இன்: வெற்றி இலக்கு 447 - 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 28 - 1 விக். (குசல் மெண்டிஸ் 16 ஆ.இ., திமுத் கருணாரட்ன 10 ஆ.இ. ஜஸ்ப்ரிட் பும்ரா 9 - 1 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right