(எம்.மனோசித்ரா)

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவர் ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வொஷிங்டன் செல்கின்றாரே அன்றி, நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திடமும் ஜனாதிபதி மன்னிப்புக் கோர வேண்டும் -  முஜிபுர் ரகுமான் | Virakesari.lk

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோபம் அதிகரித்துள்ளது. இந்த நிலைமைக்கு எதிராக போராடுவதா ? அல்லது தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதா என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கையில் எரபொருள் விலையை தீர்மானிப்பதற்கான ஏகாதிபத்திய அதிகாரத்தை அரசாங்கம் ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

அதன் காரணமாகவே ஐ.ஓ.சி.யைப் பின்பற்றி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் விலையை அதிகரிக்கிறது. எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாகவே நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளது.

மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளை தாங்கிக் கொள்ள முடியாத மக்களின் கோபமும் அதிகரித்துள்ளது.

இவற்றுக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராடுவதா அல்லது தமது பிள்ளைகளுடன் தூக்கிட்டு ற்கொலை செய்து கொள்வதா என்ற நிலைமையே மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இவ்வாறான நிலைமையிலும் மீண்டும் மீண்டும் பொறுமையுடனிருந்தால் நாடு முற்றாக அழிந்து விடும். எனவே அவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

ஏப்ரல் 11 ஆம் திகதி நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு வொஷிங்டன் செல்லவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவர் தமிழ் - சிங்கள புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடுவதற்காகவே வொஷிங்கடன் செல்கின்றார். மாறாக நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கல்ல.

இதுவே யதார்த்தம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு செல்ல வேண்டிய காலம் அண்மித்து விட்டது.

எமது போராட்டத்திற்கு எவ்வித தடைகள் ஏற்பட்டாலும் அதனை தகர்த்து முன்னோக்கிச் செல்வோம். சர்வகட்சி மாநாடு என்பவை போலியானவையாகும்.

இது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். எனவே அவர்கள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் குழுவொன்றை நியமித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.