மறைந்த புலவர் மலையக கவிஞர் குறிஞ்சித் தென்னவன்

12 Mar, 2022 | 08:56 PM
image

மலையக ஆக்க இலக்கியங்களும் ஆய்வுகளும் மேற்குறித்த மக்கள் பகுதியினரை பற்றியதாகவே இருந்துள்ளது மலையக தேசியவாதம் குறித்து மலையக மக்கள் என்கின்ற பதத்தினை சற்றுப் பரந்த கண்ணோட்டத்தில் நோக்கின் இந்நிலை நின்று மலையக இலக்கியத்தினை ஆய்வு செய்வது அறிஞர்களின் கடன் அத்தகைய இலக்கியத் துறையில் முக்கியமான கவி துறையில் தோன்றி சாதனை படைத்த ஓர் மலையக கவிஞர் தான் இந்த வி.எஸ். வேலு எனப்படும் இயற்பெயரைக் கொண்ட குறிஞ்சித்தென்னவன்.

மலையக இலக்கிய வானில் மறக்கவொண்ணா நட்சத்திரம். 

இவர் சுப்பையா முருகம்மா தம்பதியினருக்கு நோர்வூட் தென்மதுரை தோட்டத்தில் 1934.03.12 ஆம் திகதி பிறந்தார். 

பின் இவரின் பெற்றோர் நுவரெலியாவிற்க்கு அண்மையில் உள்ள லபுக்கலை தோட்டம் மேற்பிரிவிற்கு குடிபெயர்ந்தனர். 

லபுக்கலை தோட்ட பாடசாலையில் வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்ற இவர் வறுமை என்ற பிணையில் தாக்கத்திற்கு உட்பட்டு தொடர்ந்து கல்வி கற்க இயலாமல் தனது பதினோராவது வயதில் தோட்டத் தொழிலாளி எனும் பெயரை பதித்துக் கொண்டார்.

வாசிப்பின் மீது அதீத காதல் கொண்ட படியால் தனது பள்ளிப் பாடம் நின்று போனாலும் எப்படியாவது தமிழகத்து சஞ்சிகைகளையும் ஈழத்து சஞ்சிகைகளையும் கிடைக்கின்ற நூல்களையும் புராணங்களையும் வாசித்து தனது தமிழ் ஆற்றலை வளர்த்துக் கொண்டிருந்தார். 

பின்னர் தனது 18ஆவது அகவையில் தனது கன்னி கவிதைகளை எழுதத் தொடங்கினார், தனது கவிதை ஆற்றலை பரிட்சித்து பார்த்தார் என்று சொல்லலாம்.

1960 களுக்குப் பின் தான் தன்னை ஒரு கவிஞனாக அடையாளப் படுத்திக் தொடங்கினார் என்பதே பொருத்தமானதாக இருக்கும். 

இவர் தோட்டத் தொழிலாளியாக இருந்த படியால் சக தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடியவராக இருந்தார். 

ஏறக்குறைய 4500 க்கும் மேற்பட்ட கவிதைகள் 1000 க்கும் மேற்பட்ட குறும்பாக்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.

பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பவற்றில் வெளிவந்த இவரது கவிதைகளில் பெரும்பாலும் தான் வாழ்ந்த சூழல்களையும் சோகங்களையும் பதித்திருக்கிறார். 

ஆயிரக்கணக்கான கவிதைகளை இவர் எழுதிய போதும் சில கவிதைகளே நூலுருவம் பெற்றுள்ளன. 

1987இல் குறிஞ்சித்தென்னவன் கவிதைகள் என்ற நூல் வெளிவந்தது, பின்பு அதே நூல் அவர் எழுதிய சில குறும்புகளையும் இணைத்துக் கொண்டு மீண்டும் வெளிவந்தது.

2007 ஆம் ஆண்டு சாரல் நாடன் அவர்களது தொகுப்பில் “குறிஞ்சித்தென்னவன் கவிதைகள்” அவரது இன்னும் சில கவிதைகளைத் தாங்கி வெளிவந்தது. 

இவரது கவி திறனுக்கு மலையகத்தில் அங்கீகாரம் இல்லாமல் இல்லை எனவே இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார் அதில் குறிப்பாக 1996 ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சினால் கிடைத்த “கலாபூஷணம்”விருதை குறிப்பிடலாம். 

அதற்கு அடுத்த ஆண்டே 1997இல் புற்றுநோயின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சரஸ்வதியின் அருள் திகட்ட திகட்ட கிடைக்கும் லட்சுமியின் அருள் துளியும் கிடைக்கவில்லை என்றே கூறலாம், கடைசிவரை வறுமையின் தாக்கத்தை அவரால் எதிர்த்துப் போராட முடியவில்லை. 

இடதுசாரிக் கொள்கையில் பிடிப்பு கொண்ட கவிஞரால் எவரிடமும் கையேந்த மனம் வரவில்லை. எனவே அவரது கவிதைகள் அவரை விட வேறு சிலரே பயனடைந்தனர். 

இவரை தனது நண்பர் என கொண்டாடும் சிலர் கவிஞரின் மரணத்தில் கூட கலந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனை. 

கவிஞரின் மனைவி லட்சுமி, மகன் கார்த்திகேயன் பாலன், மகள்மார் தாமரைச்செல்வி, ஞான பிரியா ஆகியோர் இன்னும் வாழ்க்கை போராட்டத்தில் இருந்து மீள முடியவில்லை.

இவர்களை மீளா துயரத்தில் ஆழ்த்திய கவிஞர் இறையடி எய்திய தினம் 1998.01.19 என குறிப்பிடத்தக்கது. 

இவர் மகாகவி பாரதியார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோரை தனது ஞான குருவாக கொண்டு கவிப்புனைந்ததால் இவர் “மலையகத்தில் வாழும் பாரதி” என அழைக்கப்பட்டார்.

இவரின் மகன் கார்த்திகேயன் நுவரெலியாவில் ஒரு புத்தகக் கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். 

“1996 ஆம் ஆண்டு எனது தாயார் மரணித்த போது தனது உடம்பில் நோயின் வேதனை வாட்டிய போதும் அதனை வெளிக்காட்டாது காரியங்கள் முடியும் வரை என்னுடன் ஆறுதலாய் இருந்தார் இளவல் இரவீந்திரன் என்னும் தலைப்பில் அவர் எனது தாயாருக்காக எழுதி தந்த இரங்கற்பா துரதிஸ்டவசமாக எங்கோ தொலைந்துபோனது மிகவும் வேதனை அளிக்கிறது காலத்தில் மறக்கக்கூடாத கவிஞர்” என இவரை எஸ். இரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார். 

இத்தகைய சிறந்த கவிஞரின் ஆயிரக்கணக்கான கவிதைகள் இன்னும் அச்சில் ஏறாமல் உள்ளன எவராவது அதற்கான உதவ முன்வருவார்கள் ஆகிய சமூகத்திற்கும் கவிஞர்களுக்கும் ஆற்றும் மிகப்பெரிய சேவையாகும்.

க. வைஷ்னவி

கொ/சைவ மங்கையர் வித்தியாலயம்

மலையக கலாசார ஒன்றியம்

மாணவர் பிரிவு

                                                               

அன்னாரின் ஜனன தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right