(நா.தனுஜா)

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கென ஜனாதிபதி தலைமையில் பொருளாதாரப்பேரவை உருவாக்கப்பட்டிருக்கின்றது. அப்பேரவையில் உள்ளடங்குகின்ற ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே போன்றவர்கள் பொருளாதார நிபுணர்களா? மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளடங்கலாக நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியவர்களே அப்பேரவையில் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

ஏற்கனவே மிகவும் அதிகரித்த வாழ்க்கைச்செலவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக அனைத்துப் பொருட்கள், சேவைகளினதும் விலைகள் அதிகரிக்கப்படும் நிலையுருவாகியுள்ளது. அதேபோன்று மின்விநியோகம் துண்டிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்த காலப்பகுதியையும்விட அதிக நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. 

பொருளாதார நெருக்கடிகளை உரியவாறு கையாள்வதற்கு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே பரிந்துரைத்திருந்தோம். இருப்பினும் அரசாங்கம் அவற்றை சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தால், தற்போதைய நெருக்கடிகளைத் தவிர்த்திருக்க முடியும்.

இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கென ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் பொருளாதாரப்பேரவையை உருவாக்கியது. அதன் ஆலோசனைகளுக்கு அமைவாகவே பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதேபோன்று அப்பேரவையில் உள்ளடங்குகின்ற ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே போன்றவர்கள் பொருளாதார நிபுணர்களா? மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளடங்கலாக நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியவர்களே அப்பேரவையில் அங்கம் வகிக்கின்றனர்.

அவர்கள் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தருவார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்? மாறாக தமது தனிப்பட்ட நலன்களை அடைந்துகொள்வதற்கு இந்த நெருக்கடிகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதிலேயே அரசாங்கத்தின் உறுப்பினர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

அடுத்தாக எமது நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதன்விளைவாக உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் நாட்டின் வணிக செயற்பாடுகளிலும் பொருளாதாரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால் நாட்டில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறுகின்றார். துறைமுகத்தில் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள் பல நாட்களாகத் தரித்து நிற்கின்ற போதிலும், அதற்குரிய கட்டணத்தை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் டொலர் இல்லை. 

அவ்வாறெனில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்கின்றது அல்லவா கருதவேண்டும்? அரசாங்கத்தினால் நாட்டை உரியவாறு நிர்வகிக்க முடியவில்லை என்றால், அதற்குரிய இயலுமை காணப்படும் தரப்பினரிடம் நாட்டைக் கையளிக்குமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.