நாட்டில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் சூழ்நிலையில், இன்று முதல் கோதுமை மாவின் விலையும் அதிகரித்துள்ளதால் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

மலையகத்தில் நகர் புறங்கள் மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுள் பெரும்பாலானவர்கள், தமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கோதுமை மாவை  பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் இருவேளை ரொட்டியே உண்ணப்படும்.  

இதனால் மாதாந்தம் அதிகளவு கோதுமை மாவை அம்மக்கள் கொள்வனவு செய்வார்கள். இந்நிலையில், கோதுமை மாவின் விலை 35 முதல் 40 ரூபாவரை அதிகரித்துள்ளதால் அது அவர்களின் வாழ்க்கைச்சுமையை மேலும் அதிகரிக்க வைக்கும். 

ஏற்கனவே பெருந்தோட்ட மக்களுக்கு உரிய வகையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. தோட்டப்பகுதிகளில் நாட் சம்பளத்துக்கு வேலை செய்பவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படவில்லை. இதனால் கோதுமை மா விலை அதிகரிப்பு அவர்களுக்கு பெரும் தாக்கமாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அரசால் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மா பெருந்தோட்டத்தில் வேலை செய்யும் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது. அதுகூட அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.