(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பெருந்தோட்ட கம்பனிகளால் மலையக மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுவதால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் நாட்டில் இடம்பெறும் தொழிந்சங்க நடவடிக்கைகளைவிட மிக மோசமான நடவடிக்கை மலையகத்தில் அரங்கேறிவிடுமோ  என்ற ஆபத்தான அறிகுறி தென்படுகின்றது. 

அதனால் பெருந்தோட்ட கம்பனிகளின் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்  என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற வேலையாட்கள் நட்டஈடு(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர்  தொடர்ந்து தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தக் காலத்திற்கு தேவையான திருத்தத்தை தொழில் அமைச்சர் கொண்டுவந்துள்ளார். 

மிகப்பழமை வாய்ந்த தொழில் சட்டத்தில் இருந்த விடயங்களை புதுப்பித்து  இந்த நவீன யுகத்துக்கு பொருத்தமான திருத்தத்தை மலையக மக்கள் சார்பாக நான் வரவேற்கின்றேன்.

விசேடமாக மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் இன்று முகம் கொடுக்கின்ற தொழில் பிரச்சினைகள் பாரிய, மிக மோசமான மனித உரிமை மீறல்களாக இன்று நடந்து கொண்டிருக்கின்றன. 

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ,தொழில் அமைச்சு ,தொழில் ஆணையாளர் ,உத்தியோகஸ்தர்கள் செய்கின்ற சேவைகள் அனைத்தும் மலையக பெருந்தோட்டத்தினுடைய நிர்வாக முகாமைத்துவம் காரணமாக பெரும் பாதிப்பை  எதிர்கொண்டுள்ளது. 

இதனால் தொழில் அமைச்சருக்கு கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது.ஆகவே இந்த மலையக பெருந்தோட்ட கம்பனிகளுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள் ? 

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி இந்த  வர்த்தமானியில் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள  நிர்ணயம் என வெளியிடப்பட்டது. 

என்றாலும் அந்த வர்த்தமானிக்கு  எதிராக தனியார் கம்பனிகள்  வழக்கு தொடர்ந்துள்ளன . ஒருவருட காலத்தில்  அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 3 தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

ஆனால் ஆயிரம் ரூபா வழக்கு இன்னும் முடியவில்லை. 

மனித உரிமை மீறப்பட்டுள்ளது,பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டத்தொழிலாளர்களை வஞ்சிக்கின்றார்கள் .

தொழில் சட்டத்தை மீறியுள்ளன. இந்த 1000 ரூபா வழக்கை காரணமாக வைத்து மலையக மக்களின் அனைத்து உரிமைகளும் பெருந்தோட்டக் கம்பனிகளால் சூறையாடப்படுகின்றன. 

மலையக மக்கள் வஞ்சிக்கப்படுவதால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொழிலாளர்களின் காணி , வீட்டு உரிமைகள் தொடர்பான அநீதிகளினால் மலையக மக்களின் பொறுமை எல்லை கடந்துள்ளது. 

இதனால் நாட்டில் இடம்பெறும் தொழிந்சங்க நடவடிக்கைகளைவிட மிக மோசமான நடவடிக்கை மலையகத்தில் அரங்கேறிவிடுமோ  என்ற ஆபத்தான அறிகுறி தென்படுகின்றது.

 அதனால் பெருந்தோட்ட கம்பனிகளின் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றார்.