நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், பல்வேறு துறைகள் சார்ந்து முன்நோக்கிப் பயணிப்பதற்கு அவசியமான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கிலான கலந்துரையாடலொன்று 'அதஹஸ் பொல' என்ற தலைப்பில் 'அப்பே லங்கா' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பிலுள்ள மனியம்பதி கூடத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு துறைசார்ந்த புத்திஜீவிகள் பங்கேற்றிருந்ததுடன் தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

அமீனா ஹுசைன், பாலா பொதுப்பிட்டிய, சுனேலா ஜயவர்தன, பிரசன்ன விதானகே, ரன்துலா டி சில்வா, வ்ரேய் பல்தஸார், ஷில்பா சமரதுங்க, ஹரிந்த பொன்சேகா, மெலானி குணதிலக, தர்ஷி கீர்த்திசேன ஆகியோர் கலந்துகொண்டு தமது அனுபவங்கள், தற்போதைய சூழ்நிலையில் முன்நோக்கிப்பயணிப்பதற்கான வழிகாட்டல்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் பற்றி எடுத்துரைத்தனர்.

அதேவேளை இக்கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்டிருந்த சிறுவர் விவகாரங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் விசேட பிரதிநிதி கலாநிதி ராதிகா குமாரஸ்வாமி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய ஆகியோர் நிகழ்வில் விசேட உரையாற்றியதுடன் தற்போதைய நெருக்கடிகள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டினர்.

கலாநிதி ராதிகா குமாரஸ்வாமி 

மேலும் இதுகுறித்தக் கருத்து வெளியிட்டுள்ள ரன்துலா டி சில்வா, தனியொரு அடையாளம் அல்லது ஒரேயொரு இடத்தை அடிப்படையாகக்கொண்டு தன்னை அடையாளப்படுத்துவதை தான் ஒருபோதும் விரும்பியதில்லை என்று தெரிவித்திருப்பதுடன், இருப்பினும் 'அப்பே லங்கா' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'அதஹஸ் பொல' நிகழ்வு வீட்டில் இருப்பதைப்போன்று தன்னை உணரவைத்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். 

ரன்துலா டி சில்வா

அதேபோன்று தான் பெரிதும் வியந்த கலாநிதி ராதிகா குமாரஸ்வாமி உள்ளிட்டோருடன் கலந்துரையாட முடிந்தமையினையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

'இலங்கை தற்போது இருண்டதொரு சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கின்றது. எனவே இப்போது ஆரோக்கியமான கலந்துரையாடல்களும் அதனை நடைமுறைப்படுத்துவதும் இன்றியமையாதவையாகும். குழு ரீதியான கலந்துரையாடல்கள் அடிக்கடி நடைபெறுவதுண்டு. பெரும்பாலும் பதிலளித்தல், நிரூபித்தல் ஆகியவற்றை முன்னிறுத்தியவையாகவே அவை இருக்கும். இருப்பினும் செவிமடுத்தல், புரிந்துகொள்ளுதல், ஒன்றிணைந்து செயற்படுத்துதல் ஆகியவற்றை முன்னிறுத்திய கலந்துரையாடல்கள் மிகவும் அரிதாகவே நடைபெறும்' என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.