(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்கு அதிகளவான பிரதேச செயலகங்கள் காணப்படுகின்ற நிலையில், 7 இலட்ச மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்துக்கு வெறுமனே  5 பிரதேச செயலகங்களே காணப்படுகிறன. 

மலையக மக்களை இந்த அரசாங்கம் இரண்டாந்தர மக்களாக பார்ப்பதே இதற்குக்காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்து அதற்கான விசேட நிறுவனம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனித்துவ அடையாள அட்டையை வழங்குவதை நாமும் ஆதரிப்போம், ஆனால் மலையகத்தை பொறுத்தவரை இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. 

மலையகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு இன்னமும் அவர்களுக்கான பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. 

அதேபோல் அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க பல நடமாடும் சேவைகளை முன்னெடுதத்தாலும் கூட அதுவும் முழுமையடையவில்லை. 

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றின் மூலமாக பணத்தை பெற்றுக்கொள்ளவும் குறைவான வாய்ப்புகளே உள்ளது. 

நுவரெலியா மாவட்டத்தை ஐந்து பிரதேச செயலகங்களாக பிரித்திருக்க வேண்டும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கூட விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவற்றை செயற்படுத்தவில்லை. 

அங்குள்ள பிரதேச செயலகங்கள் உப காரியாலயங்களாக மாற்றப்பட்டுள்ளன. 

எமது மக்களை இரண்டாம் தரப்பு பிரஜைகளாக பார்க்க வேண்டாம். எமது அடிப்படை உரிமைகளை பறிக்க வேண்டாம், எமது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும் தலவாக்கலை நுவரெலியா பாதையிலே ஒரு பெரிய மரம் அறுக்கப்பட்டதால் அது சரிந்து விழுந்து மகேஸ்வரன் என்ற ஒரு கணித ஆசிரியர் உயிரிழந்துள்ளார். 

அதுமட்டுமல்ல அந்த மரத்தின் கீழ் இருந்த இந்து ஆலயத்தை மாற்று இனத்தவர்கள் பரிபாலனம் செய்யும் நிலையொன்றும் உருவாகியுள்ளது. 

இது அப்பகுதியில் இன துவேசத்தை உருவாக்கும் செயலாக மாறும். ஏற்கனவே 1990 களில் தலவாக்கலையில் ஏற்பட்ட இன பிரச்சினை பின்னர் பாரிய குழப்பங்களை ஏற்படுத்தியது. 

மீண்டும் அவ்வாறான நடவடிக்கை எடுக்கக்கூடாது. இப்போது இருக்கும் ஆலயத்தையும் இடத்தையும் அபகரிக்க முயற்சிக கூடாது. அரசாங்கம் இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.