(என்.வீ.ஏ.)
அன்டிகுவா நோர்த் சவுண்ட் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கின்றது.

அப் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 311 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் அவ்வப்போது மழையினால் தடைப்பட்டதால் 81 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்தது.
போட்டியின் இரண்டாம் நாளான புதன்கிழமை 09 ஆம் திகதி தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்கள் எனற நிலையிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 311 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் 28 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டம் இழந்தார்.

தனது துடுப்பாட்டத்தை 109 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த ஜொனி பெயார்ஸ்டோவ் 140 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

கடைநிலை வீரர்கள் எவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ஜேடன் சீல்ஸ் 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜேசன் ஹோல்டர் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜொசப் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெமர் ரோச் 86 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மேற்கிந்தியத் தீவுகள், பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது க்ரெய்க் ப்ரத்வெய்ட் (55), ஜோன் கெம்பல் (35) ஆகிய இருவரும் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக் கொடுத்தனர்.

இவர்கள் இருவரைத் தொடர்ந்து ஷமார் புறூக்ஸ் (18), ஜெர்மெய்ன் கெம்பெல் (11) ஆகியோரும் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களாக இருந்தது.

இதனைத் தொடரந்து நிக்ருமா பொனர் (34 ஆ.இ.), ஜேசன் ஹோல்டர் (43 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளை நல்ல நிலையில் இட்டுள்ளனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், கிரெய்க் ஒவர்ட்டன், மார்க் வூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை இழந்தனர்.