கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் - ரணதுங்க

09 Mar, 2022 | 04:59 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். 

இலங்கை கிரிக்கெட்டின் அழிவிற்கு கிரிக்கெட் நிர்வாகத்தைப் போலவே  வீரர்களது முகவர்கள் மற்றும் முகாமையாளர்களும் காரணம்  என  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"கிரிக்கெட் வீரர்கள்  சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். குறைந்தது இவர்கள் போட்டிகளில் விளையாடும்போதாவது சமூகவலைத்தளங்களில் ஈடுபடுவதை தடை செய்ய  வேண்டும். 

சில கிரிக்கெட் வீரர்களது முகாமையாளர்கள் அல்லது முகவர்கள் தத்தமது  கிரிக்கெட் வீரர்களை முன்னேற்றிச் செல்வதற்காக அதிகளவான பணத்தை செலவிட்டு வருகின்றனர். 

பணம் செலுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களின் ஊடாக வீரர்களை பிரபல்யப்படுத்திக் கொள்வதானது விளையாட்டில்  ஆற்றல் திறமைகளை  முன்னேற்றிக்கொள்வதற்கான  காரணமாக அமையாது.  

விளையாட்டின் முன்னேற்றத்திற்காக இதுபோன்ற முடிவுகளை எடுப்பது நியாயமானது அல்ல, ஆனால் முதலீடு செய்வற்கான ஓர் விடயமாகவும் இது  கருதப்பட்டு வருகிறது. 

நான் கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் இருந்தால், கிரிக்கெட் வீரர்கள்  சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை கட்டாயமாக தடை செய்வேன். 

மேலும், அதற்கு அப்பால் சென்று கிரிக்கெட் வீரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்  கருத்துக்களை வெளியிடும் சமூக வலைத்தள பாவனையாளர்களிடம், இதுபோன்ற விடயங்களை மேற்கொள்ள வேண்டாமென மரியாதையுடன் வேண்டுகோள் விடுக்க மறக்கமாட்டேன்"  என்றார்.

இந்நாட்டில் சிரிக்கெட் விளையாட்டு  சீரழிவதற்கு கிரிக்கெட்  நிர்வாகம் மற்றும் கிரிக்கெட்டிலுள்ள முகவர்கள்,  முகாமையாளர்கள் மீதும் அர்ஜுன ரணதுங்க குற்றம் சாட்டினார்.

இந்த முகவர்கள் தொடர்ந்தும் பணம் சம்பாதிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right