(எம்.எப்.எம்.பஸீர்)
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனையில் மகாவலியின் இடது கரையில் மாடுகளுக்கான மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்டிருந்த காணிகளில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் சிலர் குடியேறியுள்ளமையை சட்ட மா அதிபர் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன் எனும் ஜனா ஆகியோர் தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு (ரிட் மனு) நேற்று திங்கட்கிழமை 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில் இம்மனு இவ்வாறு பரிசீலிக்கப்பட்டது.
இதன்போதே, பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி விக்கும் டி ஆப்றூ மேற்படி விடயத்தை நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.
அதன்படி, 32 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்று குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனையில் மகாவலியின் இடது கரையில் மாடுகளுக்கான மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்டிருந்த 100 ஏக்கர் காணியை சோள செய்கைக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு, மகாவலி அதிகார சபை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கக் கோரி கடந்த வருடம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சோளச் செய்கைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட அதிகாரப்பத்திரம் காலாவதியான நிலையில், மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கான துரித தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை கிடைக்க வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்றூ முன்னர் மன்றில் நீதிமன்றில் கூறிப்பிட்டிருந்தார்.
இந் நிலையில், குறித்த விவகாரத்தில், மேய்ச்சல் தரை நிலத்தில் சட்ட விரோத குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளமையும் மனுதாரர்களுக்காக மன்றில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனினால் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதன்படி நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட கறவை மாடுகளுக்கு உணவளித்த மயிலத்தமடு, மாதவனை பகுதியை மீண்டும் கால்நடை வளர்ப்பாளர்களிடம் கையளித்தால் தமது மனுவை வாபஸ் பெறுவதற்கு தயாராகவுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதற்கு முன்னர் நீதிமன்றில் தெரிவித்தார்.
இந் நிலையில் நேற்று, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் தெரிவிக்கப்பட்ட சட்டவிரோத குடியிருப்பாளர்களை அகற்றும் நடவடிக்கை தொடர்பில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றவும், சட்டவிரோத குடியிருப்பாளர்களை அகற்றும் நடவடிக்கை குறித்த சட்ட நடவடிக்கையின் நிலைமையை மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதியன்றோ அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.
அதன் பின்னர், இந்த ரிட் மனுவை முன்னெடுத்துச் செல்வது அவசியமா இல்லையா என்பதை தாம் மன்றுக்கு அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என இதன்போது மனுதாரர் தரப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி விக்கும் டி ஆப்றூ குறிப்பிட்டார்.
இதனையடுத்து இந்த ரிட் மனு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், மட்டக்களப்பு பிரதேச செயலாளர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் உள்ளிட்ட தரப்பினர் இந்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM